கந்த சஷ்டி கவசத்தை விமர்சனம் செய்வது சரிதானா..? இதனை தி.மு.க. எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்..?

கந்த சஷ்டி கவச விவகாரத்தை எந்தக் கட்சியும் ஆதரிக்கத் தயாரில்லை என்பது மட்டுமல்ல,தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று நிறுவது தான் தற்போது பெரும்பாடாகிவிட்டது என்று பதிவு வெளியிட்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.


பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெயரில் பகை வளர்க்கும் பிரச்சாரம் தான் அரங்கேறியுள்ளது. மூட நம்பிக்கைகள் மிகுந்து சமூகம் பேரழிவை சந்தித்த காலங்களிலெல்லாம் வரலாற்றுத் தேவையாக வந்து வழிகாட்டியதே நாத்திகம்.பகுத்தறிவு பேசுபவர்கள் எல்லாம் தங்களை பெரியாராகக் கருதிக் கொள்ளமுடியாது!

பெரியார் வரலாற்றின் தேவையாக வந்தவர்! பச்சிளங் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது,விதவைகளை காலமெல்லாம் கொடுமைப்படுத்துவது, சடங்குகளின் பெயரால் எளிய மக்களின் பணம் விரையமாவது, பார்ப்பனிய ஆதிக்கம் சக மனிதர்களை தாழ்த்தி வைத்திருந்தது…ஆகியவற்றை எதிர்த்து தரைமட்டமாக்க ஒரு பெரியார் வரலாற்றின் தேவையாக வந்தார்!

இன்றைக்கு மதத்தின் பெயரால் மக்களை வென்றெடுக்க காத்திருக்கும் மதவாத சக்திகளுக்கு ஒரு சிறந்த ஆயுதத்தை கூர் தீட்டித் தந்துள்ளது கருப்பர் கூட்டம். கந்தர் சஷ்டி கவசத்தை ஆபாசமாகப் பார்ப்பது என்பது அறியாமையின் உச்சம்! ஒரு பக்தி பனுவலை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பக்குவமின்றி, அரைவேக்காட்டுத்தனமாக உளறியுள்ளனர்.

முருகன் என்ற கடவுள் காலங்காலமாக தீமைகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றும் கடவுளாக தமிழ் சமூகத்தின் ஆழ் மனதில் பதிந்து போன பிம்பம்! முருகனை நினைப்பதிலும்,வழிபடுவதிலும் தங்களுக்கு அளப்பறிய பாதுகாப்பு உணர்வை தமிழ் மக்கள் பெறுகின்றனர்.அதற்கு வடிவம் சேர்க்கும் அம்சமாக உணரப்படுவதே கந்தர் சஷ்டிக் கவசம்!

தமிழகத்தின் மூலைமுடுக்கு பட்டிதொட்டி எங்கும் தினசரி பாடப்படும் கோடானுகோடி முருக பக்தர்களின் வேதம் என்று கூட அதைச் சொல்லமுடியும்! இன்னும் சரியாகச் சொல்வதென்றால்,தமிழன் உலகில் எங்கெங்கெல்லாம் புலம் பெயர்ந்துள்ளானோ அங்கெல்லாம் ஒலிக்கும் பாடல். இதில் எந்த ஆபாசமும் இல்லை! ஒன்றை ஆபாசமாக உணர்வதும்,புனிதமாக உணர்வதும் சம்பந்தப்பட்டவர்களின் மன நிலை சார்ந்தது!

தன்னுடன் வாழும் சக மனிதர்களின் உணர்வை,உரிமைகளை கொஞ்சமும் புரிந்து கொள்ளக் கூட முயற்சிக்காமல்,அவனுடைய மகத்தான நம்பிக்கைகளின் மீது மிக வன்மமான ஒரு தாக்குதலை நடத்துவது எந்த விதத்திலும் பகுத்தறிவுக்கு உகந்ததல்ல!

மனித உடலின் எந்த ஒரு உறுப்புமே ஆபாசமானதோ,அறுவருக்கதக்கதோ அல்ல! ஆண்குறி, பிட்டம், மலம் வெளியேறும் ஆசனவாயில்…மார்பு காம்பு…ஆகிய யாவுமே அதி புனிதமானவை! உன்னதமானவை. இந்தப் பாடல் குறித்து நான் ஆய்வு செய்தவற்றை சிறிதளவு பகிர்ந்து கொள்கிறேன்.

கந்தர் சஷ்டிக் கவசம் பாலதேவராய சுவாமிகளால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிக ஆழ்ந்த பொருள் கொண்ட ஒரு பக்தி பனுவல்! சிலர் பதினெட்டாம் நூற்றாண்டு என்றும் சொல்கிறார்கள்!

ஒரு பாடல் தோன்றிய காலகட்டத்தின் சமூகச் சூழலை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்! அக் காலம் தமிழ் சமூகம் புறச் சூழல்களில் பல பகைவர்களைக் கொண்டிருந்தது. பில்லி,சூனியம் வைக்கும் மாந்திரீகவாதிகள் நிறைந்த காலமாகவும் இருந்தது. இப்போதும் கூட சில இடங்களில் இருக்கிறது தானே! 

அந்த மாந்தீரிகவாதிகள் மூலமாக மனித உடலின் ஏதாவது ஒரு உறுப்பை முற்றிலும் செயலிழக்க வைக்கும்,விளங்காமல் செய்யும் கொடுமைகள் அரங்கேறுவது வழக்கம்! அதனால் தான் இப் பாடலில் முருகனிடம் ஒவ்வொரு உறுப்பாக பாதுகாக்கும் கோரிக்கை முக்கியத்துவம் பெற்றது!

அத்துடன் மக்களை பாதிக்கும் அக்காலத்தியப் பிணிகள் பலவற்றில் இருந்தும் தீர்வுக்கு வேண்டுகிறது இப் பாடல். எல்லாவற்றும் மேலாக குழந்தை பாக்கியம் வேண்டுவோரின் பாடலாகவும் இது காலங்காலமாக கருதப்பட்டுவருகிறது. அதுவும் ஆண்குழந்தையாக முருகனே வந்து பிறக்க கேட்கும் பாடலாகவும் இது உள்ளது!

மிக கற்றறிந்த அறிஞர்களால் கூட சில இடங்களில் பொருள் உணரமுடியாது! அந்த அளவுக்கு நுட்பமும்,பொருட்செறிவும் கொண்டது இந்தப் பாடல்! இதற்கு உரை எழுதுவது கூட பிழையாய் போய்விடும், படிப்பவன் பிழையாய் புரிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது எனக் கருதி நம் முன்னோர்கள் இதற்கு உரை எழுதுவதையே தவிர்த்து வந்தனர்.ஆனால்,ஒரளவுக்கு சொல்லக் கூடிய விளக்கம் வரையிலும் சொல்வது குற்றமாகாது என்று துணிந்து முயன்றவர் அமிர்தம் சுந்தரநாத பிள்ளையவர்கள்! இவர் எழுதிய கந்தர் சஷ்டிக் கவசம் மூலமும்,மெய்ப் பொருள் விளக்க விருத்தி உரையும் என்ற நூல் 1926 ல் அ.மஹாதேவ செட்டியார் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூலில் சில இடங்களில், ’’இதற்கான பொருளை குருவிடம் கேட்டறிக’’ என்று சொல்லப்பட்டிருக்கும். 

கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும் சில ’ரைம்மிங்’கான சொற்கள் மந்திரச் சொற்களாகும்! மந்திரச் சொற்கள் சக்திவாய்ந்தவை! அதை ஏதோ போகிற போக்கில் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே எப்படி அதை துதிக்க வேண்டும் என்பதையும் பாலதேவராய சுவாமிகளே பாட்டில் விளக்கியுள்ளார்.

முருகன் என்பவனே ஓரு மாபெரும் வீரக் கடவுள் தான். வீரத்தின் வடிவமாக காலங்காலமாக வணங்கப்படுவன் தான்! அந்தக் காலத்தில் எளிய மக்களை கொடுமைக்கு ஆளாக்கிய அசூரர்கள் எனப்படுவோரிடமிருந்து காப்பாற்றிய ஒப்பற்ற வீரன் என்று தான் மக்களால் போற்றிப் புகழ்ந்து வணங்கப்படுகிறான். அதனால் தான் முருகன் பிம்பத்திற்கு கீழாக, ’’யாமிருக்க பயமேன்?’’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். அவன் சூரசம்காரம் செய்யும் கடவுளாகத் தான் கொண்டாடப்படுகிறான்!

ஆனால்,இன்றைய சூழலில் முருகன் சூரசம்காரம் செய்ய வேண்டியவை என்ன என்ற தேடுதலுடன் கூட இதை பொருத்தி பார்க்கலாம். பல வகைகளில் இந்தப் பாடல் இன்றைய காலமாற்றச் சூழலில் மாற்றிப் பாடப்பட வேண்டியாகக் கூட நான் உணர்கிறேன்.இன்றைய மக்களுக்கு உண்மையான எதிரியை யார் என புரிய வைக்க வேண்டும்!

சித்தர்கள் என்பவர்கள் அதைத் தான் செய்தார்கள்...!

’’கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக…’’ என்று வள்ளலார் கூறியுள்ளார். ஆகவே சமூகத்தின் நலன் சார்ந்து எதிர்க்க வேண்டியவை என்ன என்ற புரிதல் தான் மிகமிக அவசியமானது.

பகுத்தறிவோ, நாத்திகமோ…ஆன்மீகமோ…எதுவானாலும், அது மக்களுக்கு நன்மை சேர்ப்பதாக, மக்களை பிளவுபடுத்தாமல் ஒன்றிணைப்பதாக, மேன்மேலும் நேசத்தை வளர்ப்பதாக அமையட்டும்.