யாரும் பார்க்காதவகையில் அவமானம் செய்தால் குற்றம் இல்லையா..? உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு திருமாவளவன் போர்க்கொடி.

எஸ்சி / எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஒருவரை யாரும் பார்க்காத விதத்தில் அவமானப்படுத்தினால் அது வன்கொடுமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.


ஹிதேஷ் வர்மா -எதிர்- உத்தரகாண்ட் மாநில அரசு என்ற வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதில் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் பிரிவு 3 (1) ( r) பொருந்தாது என்றும் பாதிக்கப்பட்டவர் வீட்டுக்குள் தனியே இருக்கும்போது அவரை அவமானப்படுத்தும் விதமாக பேசியது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் வராது என்றும் புதிய விளக்கத்தை அளித்திருக்கிறது.

மற்றவர்களுக்கு தெரியும் விதமாக பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டால்தான் அது குற்றம் இல்லாவிட்டால் அது குற்றம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதையே பெண் ஒருவருக்குப் பொருத்திப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எவரும் அறியாமல் பெண்ணொருவர் களங்கப்படுத்தப்பட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாலோ அது குற்றமே ஆகாது என்று உச்ச நீதிமன்றம் கூறுமா? ‘பார்வையாளர்கள் முன்னால் செய்யப்பட்டால்தான் அவமதிப்பு’ என்ற இந்த விளக்கம் இனி யாருக்கும் தெரியாமல் எஸ்சி எஸ்டி மக்களை அவமதிக்கலாம் என்ற ஊக்கத்தை சாதி வெறியர்களுக்கு ஏற்படுத்திவிடும். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் ஆன்மாவையே கேள்விக்குள்ளாக்குகிறது. அந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாகவும் இருக்கிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்து ஏற்கனவே இப்படி எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மத்திய அரசு உடனடியாக அதற்கு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதுபோல இப்போதும் சட்டத்திருத்தம் கொண்டு வந்து உச்சநீதிமன்றம் இழைத்திருக்கும் அநீதியைக் களையவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி நாகேஸ்வரராவ் அவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடர்ந்து தீர்ப்புகளை வழங்கி வருகிறார். இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்று சொன்னதோடு இட ஒதுக்கீடு தொடர்பான எந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தாலும் அதை உடனடியாகத் தள்ளுபடி செய்தும் வருகிறார். இப்போது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக இந்தத் தீர்ப்பையும் அளித்திருக்கிறார்.

இத்தகைய போக்கு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளையோ, எஸ்சி / எஸ்டி மக்கள் தொடர்பான வழக்குகளையோ நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்விற்கு அனுப்புவதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.