மஞ்சள் வாழை பழத்தை கலர் பூசி செவ்வாழை ஆக்க முடியுமா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

செவ்வாழை பழத்தின் தோலின் மீதுள்ள நிறமியின் காரணமாகவே அது சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது என்றும் அதனை விரலால் கீரும் பொழுது அதன் அடிப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் தோல் இருக்குமெனவும் இயற்கை விவசாயிகள் பலரும் கூறுகின்றனர்


கடந்த சில நாட்களுக்கு முன்பாக மஞ்சள் நிற வாழைப்பழத்தில் சிவப்பு நிறம் பூசப்பட்டு செவ்வாழைப்பழமாக விற்கப்படுகிறது என்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. வீடியோவில் ஒருவர் பாத்திரம் தேய்க்கும் கம்பி நாரினை பயன்படுத்தி செவ்வாழைப்பழத்தை சோப்பு போட்டு தேய்க்கும் பொழுது தோலின் மீதுள்ள சிவப்பு நிறம் விலகி மஞ்சள் நிறமாக வாழைப்பழம் காட்சியளிக்கிறது . இதனைப் பார்க்கும்போது மஞ்சள் வாழைப் பழத்தின் மீது சிவப்பு நிற சாயத்தை பூசி மக்களை ஏமாற்றி விற்கிறார்கள் என்று அவர் மிகுந்த ஆதங்கத்துடன் அந்த வீடியோ பதிவில் கூறியிருந்தார்.

தற்போது அந்த வீடியோ பதிவில் கூறியிருப்பது உண்மையா என பலரும் குழம்பி வருகின்றனர். இதனையடுத்து கன்னியாகுமரியில் உள்ள வாழைப்பழம் வியாபாரி ஒருவர் பாத்திரம் தேய்க்கும் கம்பி நாரைப் பயன்படுத்தி ஒரிஜினல் செவ்வாழைப்பழத்தை தேய்த்து பார்த்திருக்கிறார். அப்போது மேல் இருந்த சிவப்பு நிறம் மறைந்து உள்ளே இருந்த மஞ்சள் நிறம் வெளியே தெரிந்தது. ஆகையால் அந்த விவசாயி பொதுவாகவே வாழைப்பழத் தோலை மெலிதாக கீரும்போது உள்ளே இருக்கும் மஞ்சள் நிறத் தோல் வெளியில் தெரியும் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் வாழைத்தோப்பில் வாழைமர இடுக்கில் தோன்றும் இரண்டாவது அல்லது மூன்றாவது கன்றுகளிலிருந்து காய்க்கும் வாழைப்பழங்கள் ஊட்டச்சத்து குறைபாடு எப்பொழுதும் வளர்ச்சி குறைந்ததாகவே காணப்படும். ஆகையால்தான் அது சிறியரக செவ்வாழையாக தோற்றமளித்து இருக்கிறது என்றும் அந்த விவசாயி கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் ஒருவேளை அந்த வாழைப் பழத்தின் மீது சாயம் பூசப்பட்டு இருந்தால் அந்தத் தோலை கழுவும்போது வந்த நீரும் அந்த சிவப்பு நிற சாயத்தோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த நீர் அப்படி சிவப்பு நிறமாக மாற வில்லை ஆகையால் அந்த தோலின் மீது எந்தவித சாயம் பூசப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.