வெளிநாட்டினர் தங்கியுள்ளதாக பரவிய தகவல்..! ஈஷா யோகா மையத்திற்குள் போலீசாருடன் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள்! அங்கு நடந்தது?

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா ஆசரமத்தில் வெளிநாட்டினர் தங்கியுள்ளதாக தகவல் வெளியானதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.


தமிழகம் முழுவதும் கொரோனா பரவ வெளிநாடுகளில் இரந்து வந்த இஸ்லாமிய மத போதகர்கள் தான் காரணம் என ஒரு தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோடு, சேலம் மற்றும் மதுரையில் மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்களால் தான் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திடீரென ஈஷாவுக்கு எதிராக ஒரு தரப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள ஏராளமான வெளிநாட்டினர் ஈஷா மையத்திற்கு வந்தததாகவும் அவர்கள் அனைவரும் தற்போது வரை ஈஷா மையத்தில் தங்கியுள்ளதாகவும் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்டோர் கூறி வந்தனர்.

இஸ்லாமிய மத குருமார்களை தனிமைப்படுத்தியது போல் ஈஷா யோகா மையத்தில் உள்ள வெளிநாட்டினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஈஷா மைய நிர்வாகிகளை தனிமைப்படுத்தாதது ஏன்? அவர்களுக்கு மருத்தவ பரிசோதனை செய்யப்பட்டதா என்றெல்லாம் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்பினர் கேள்வி எழுப்பினர்.

ஆனால் இவர்கள் கேள்வி எழுப்புவதற்கு முன்னதாகவே ஈஷா யோக மையத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவா்கள் 150 பேருக்கு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொண்டது தற்போது தெரியவந்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் தங்கள் ஆசிரமத்தில் உள்ளவர்களின் விவரங்களை ஈஷா நிர்வாகம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. 

இதன் அடிப்படையில் வட்டார மருத்துவ அதிகாரி கனகராணி தலைமையில் பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாலாஜி, ஆலாந்துறை பகுதி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், செவிலியா் கமலாதேவி உள்ளிட்டோா் பரிசோதனையில் ஈடுபட்டனா்.  

சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பரிசோதனையின் முடிவில் ஈஷா மையத்தில் உள்ள வெளிநாட்டினர் யாருக்கும் கொரோனா நோய்த் தொற்று அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஊடகங்களில் தங்களுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாகவே ஈஷா மையம் தாங்களாகவே சென்று அதிகாரிகளிடம் தெரிவித்து பரிசோதனைக்கு தங்கள் நிர்வாகிகளை உட்படுத்தியுள்ளது.

வழக்கமாக இது போன்ற தகவல்களை ஈஷா செய்திக்குறிப்புகள் மூலமாக ஊடகங்களுக்கு தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த விவகாரத்தை அவர்கள் செய்திக்குறிப்பாக வெளியிடாததால் சில ஊடகங்கள் ஈஷாவில் ஏன் யாருக்கும் பரிசோதனை செய்யவில்லை என்று செய்திகள் வெளியிட்டன.