ரஜினி தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கிறாரா…? கமல் கட்சி நிர்வாகி ஆவேச பதிவு.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தொல்காப்பியன் என்பவர் ரஜினியை கிண்டல் செய்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இதோ, அந்த பதிவில் முக்கியப் பகுதிகள் மட்டும் இங்கே.


‘மக்களுக்கு ஏதாவது செய்யணும்’ என்று சதா சொல்லிக் கொண்டு இருக்கும் ரஜினி கடைசியாக ‘ஆன்மீக அரசியலை’ தேர்ந்து எடுத்து தமிழனை ‘செய்தார்!’ கடவுளை மறுப்பவருக்கும், கடவுள் பிரக்ஞை இல்லாதவருக்கும், கடவுளில் பேதம் பார்ப்பவருக்கும், ஒன்றே கடவுள் என்பவருக்கும், கடவுளை சட்டை செய்யாமல் விதி விட்டபடி வாழ்வு என்று வாழ்வோருக்கும் ரஜினிகாந்த் இந்து கடவுளை கற்பிக்கிறார். 

தனது சாதி, மத, இன, மொழி பேதங்களை எல்லாம் கைவிட்டு கடந்த நாற்ப்பத்தி ஐந்து வருடங்களாக ரஜினிகாந்துக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளித்து வந்த தமிழனுக்கு இந்து கடவுளை பரிசாக அளிக்கும் ரஜினிகாந்த் எத்தனை பெரிய அறிவிலி! எத்தனை பெரிய கயவர்! எத்தனை பெரிய சுயநலமி! எத்தனை பெரிய கருங்காலி! எத்தனை பெரிய காரியகாரர்! எத்தனை பெரிய கைகூலி! எத்தனை பெரிய அய்யோக்கியர்! எத்தனை பெரிய யூதாஸ்? எத்தனை பெரிய ப்ரூட்டஸ்?

கடவுளை மறுப்பவனும் கடவுளை பூஜிப்பவனும் தலை வணங்கி ஏற்கும் உலகின் தலை சிறந்த ‘தத்துவ ஞானியான’ பெரியாரை, ஒரு மதவாதியின் மேடையில் நின்று கொண்டு நிந்தித்த, இந்த ரஜினிகாந்த்தான் தன்னை பின் தொடரும் தமிழனுக்கு ஆன்மீக அரசியலை அறிமுகப் படுத்துகிறார். இது ஒரு திட்டமிட்ட மோசடி இல்லையா?

தன்னை பின் தொடரும் அப்பழுக்கற்ற தமிழனை மூடவாதத்தின் மீது கொண்டு செலுத்தத் துணிந்த ரஜினிகாந்த் ஒரு யூதாஸ் இல்லையா? ரஜினியிடம் இருந்து வெளிப்படும் கலை வெளிப்பாட்டுக்காக மட்டுமே அவரை அரசியலிலும் பின்பற்றும் மாசு மருவற்ற தமிழனை மத பயங்கரவாதிகளிடம் விற்கும் ரஜினிகாந்த் ஒரு ப்ரூட்டஸ் இல்லையா?

ரஜினிகாந்தை தமிழகத்தின் பீஷ்மர் என்றும் சொல்லலாம்! ஆம் அவர் பீஷ்மரேதான். பீஷ்மர் தின்றது கௌரவர்களின் உப்பை; ஆனால் அவருடைய விசுவாசம் எல்லாம் பாண்டவர்கள் மேல்தான் இருந்தது! அந்த பீஷ்மரைப் போன்றவர்தான் இந்த ரஜினியும்!

ரஜினி தின்னுவது தமிழனின் உப்பை; ஆனால் அவரது விசுவாமோ தமிழ் விரோதிகளிடம்தான் செல்கிறது. ஓரு பொதுவான கட்சியைத் தொடங்கி, அதில் அனைத்து வகையான உணர்வாளர்களையும் உள்ளடங்கச் செய்து, பொது நோக்கத்துகாக அரசியல் செய்வது வேறு. பல்வேறு உணர்வாளர்களை ஒரே ஒரு மதவெறி அரசியலுக்குள் கொண்டு திணிப்பது வேறு. 

ரஜினி என்ன செய்கிறார்? தனக்கு சோறு போட்ட இசுலாமியனுக்கு, கிரிஸ்தவனுக்கு துரோகம் செய்கிறார். தனக்கு பாதுகாப்பு அளித்த பகுத்தறிவாளனுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார். ஒட்டு மொத்தமாக தமிழகத்தின் சமூக மன நிலையின் மீது காரி உமிழ்கிறார்! இது எத்தனை பெரிய சமூக துரோகம்!

நாற்பத்தி ஐந்து வருட காலமாக உப்பிட்ட தமிழனுக்கு நீங்கள் என்ன செய்து இருக்கிறீர்கள் ரஜினிகாந்த்... அவனை கொண்டுபோய் மத பயங்கரவாதிகளிடம் விற்றதைத் தவிர? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ம.தொல்காப்பியன்.