ராகுல் பிரதமர் வேட்பாளர்! அவசரப்பட்ட ஸ்டாலின்! கண்டு கொள்ளாத சோனியா!

ராகுல் காந்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததை சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாருமே விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறி வந்தார். ஆனால் தி.மு.க உயர்மட்ட குழு ஆலோசனைக்கு பிறகே பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறி வந்தார். இந்த நிலையில் திடீரென சென்னையில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் வேட்பாளர் குறித்து பேசிய பரபரப்பை பற்ற வைத்தார் ஸ்டாலின்.

  ராகுல் காந்தி அவர்கள் தான் அடுத்த பிரதமர், அவர் ஆட்சி செய்ய வர வேண்டும், நல்லாட்சி தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் ராகுல் காந்தியை பிரதமராக்க தி.மு.க உதவும் என்றும் ஸ்டாலின் பகிரங்கமாக தெரிவித்தார். இதுநாள் வரை உயர்மட்ட குழு கூடி தான் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று ஸ்டாலின் கூறி வந்தார். ஆனால் திடீரென தி.மு.க மேடையில் ராகுலை ஸ்டாலின் தூக்கி பிடித்ததன் பின்னணியில் 3 மாநில தேர்தல் முடிவுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

  ராகுலின் தலைமைப் பண்பு கடந்த வாரம் வரை பலராலும் சந்தேகிக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமே கூட ராகுலை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்நிறுத்தாது என்று வெளிப்படையாக கூறி வந்தார். இதே காரணத்திற்காக தான் ஸ்டாலினும் கூட கடந்த வாரம் வரை பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் அமைதியாக இருந்தார். ஆனால் மூன்று மாநில தேர்தல் வெற்றிக்கு பிறகு ராகுல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.


  ஆனால் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. காரணம் வடக்கில் தற்போது வரை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை இறுதி செய்யவில்லை. மாயாவதி, அகிலேஷ் யாதவ், சரத்பவார், லாலு போன்றோர் பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் மாயாவதி, சரத்பவார், மம்தா போன்றோர் அவசரம் காட்டமாட்டார்கள்.

  தற்போது ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்துள்ளதால் செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து வட மாநில தலைவர்களிடம் கேள்வி எழுப்புவார்கள். அப்போது நிச்சயம் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்பது குறித்து சாதகமான பதிலை தரமாட்டார்கள். இதனால் ராகுலுக்கு தேசிய அளவில் தர்மசங்கடமான சூழல் ஏற்படும்.

  மேலும் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே இரண்டு கருத்துகள் உள்ளன. எனவே பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் ஸ்டாலின் தேவையில்லாமல் அவசரப்பட்டுவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.