காமராஜருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

காமராஜருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அவரது உதவியாளர் வைரவன் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு காமராஜர் என்ன பதில் சொன்னார் என்று தெரியுமா?


காமராஜர் இளவயதில் விருதுநகர்  மாரியம்மனுக்கு தீவிர பக்தராக இருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியதும் கோயிலுக்குச் செல்வதற்கும் சாமி கும்பிடவும் நேரமில்லாமல் போய்விட்டது.

அதன்பிறகு  சென்னைக்குச் சென்றதும் வீட்டில் சாமி கும்பிடும் பழக்கம் நின்றுபோனது.  கட்சி நிகழ்ச்சிகளுக்காக  புகழ்பெற்ற கோயிலைத் தாண்டிச்செல்கிறார் என்றாலும், காரை நிறுத்தி கும்பிடும் வழக்கம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் எந்தக் கோயிலையும், எந்த சாமியையும்   தேடிச் சென்று கும்பிடும் வழக்கம் கிடையாது.

அதே நேரம் அரசுப் பணியாக கோயிலுக்குச் செல்ல நேர்கையில் பரிவட்டம் கட்டினால்  தடுப்பதும் இல்லை.  சூடம் ஏற்றிக் காட்டினால் கண்களில் ஒற்றிக்கொள்வார். திருநீறு வைத்தால் ஏற்றுக்கொள்வார். கடவுளை  கடமையாக மட்டுமே பார்த்தவர் காமராஜர்.

அவரது உதவியாளர் வைரவனுக்கு காமராஜருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறத இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் வைரவன் சாமி கும்பிட்டால், பிரசாதம் கொடுத்தால் வாங்கிக்கொள்வார். ஆனால் அவராக வந்து கும்பிட மாட்டார். அதனால் தன்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக காமராஜரிடம் ஒரு முறை அவரே நேரில் கேட்டார்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை  இருக்கிறதா ?

இந்தக் கேள்விக்கு காமராஜர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

வேற சோலி இல்லையா உனக்கு

இதுதான் காமராஜர். மதம் என்பது தனக்குள் இருக்க வேண்டியது என்பதை உணர்ந்தே இருந்தவர் காமராஜர்.