ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இழுத்து மூட முயற்சி நடக்கிறதா? காவிகளின் திட்டம் பலிக்குமா?

முகமூடி அணிந்துவந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அடிதடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யாமல், இழுத்தடித்துவரும் காவல் துறை மூலம் அந்த பல்கலைக்கழகத்தை இழுத்து மூட முயற்சி நடப்பதாக சொல்லப்படுகிறது.


இது குறித்து அழுத்தமான கருத்தை பதிவு செய்திருக்கிறார் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி. டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள். அவசரக் கோலத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ. என்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, போராடி வருகின்றனர். இந்த மாணவர்களை, பல்கலைக்கழகத்தின் வளாக விடுதிக்குள் புகுந்த முகமூடி அணிந்த 30 குண்டர்கள் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். 

‘‘இந்தத் தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம்‘’ என்று ‘ஹிந்து ரக்ஷா தளம்‘ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் பிறகும் இந்த காவிக் காலிகள்மீது சட்டம் பாயவில்லை. இதிலிருந்து இதில் மேலிடத்தின் கண்ஜாடையோடுதான் இவர்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகவில்லையா?

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி நாட்டில் பொது அமைதி, ஒழுங்கினைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசின் உள்துறை இதனை வேடிக்கைப் பார்ப்பதா? இதைவிட பெருத்த தேசிய அவமானம் வேறு உண்டா? படிக்கும் பல்கலைக் கழக மாணவர்கள் நாளை இந்த நாட்டினை வழிநடத்தப் போகிறவர்கள். அவர்கள் தங்களது எதிர்ப்பை - ஜனநாயக நாட்டில், அறவழியில் எதிர்க் கருத்துகளைக் கூற உரிமை இல்லையா?

கருத்தைக் கருத்தாலே சந்திக்கத் தெம்பும் திராணியும் இல்லாத கயமைத்தனம் - கோழைத்தனம்தானே இப்படி முகமூடிகளை அணிந்து மாணவ இளந்தளிர்களிடம் இப்படி உயிர் பறிப்பு வேலை செய்து அவர்களை அச்சுறுத்தி அடக்க முயற்சிப்பது எவ்வகையில் நியாயம்? இதை வைத்து பல்கலைக்கழகத்தை முடக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. ஆளும் பா.ஜ.க. இதுபோன்ற முகமூடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்;

இல்லையெனில் மக்கள் பாடம் புகட்டவேண்டிய நேரத்தில் தக்க பாடம் புகட்ட தவறமாட்டார்கள் - இது வரலாற்று உண்மை என்று கூறியிருக்கிறார் வீரமணி.