சென்னைக்கு சீல்? இ பாஸ் நிறுத்தம்? உள்ளே நுழைய, வெளியேற தடை? என்ன நடக்கிறது தலைநகரில்?

கட்டுப்பாட்டை இழந்து பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சென்னைக்கு சீல் வைக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தமிழகத்திலும் தன்னுடைய கோர தாண்டவத்தை காண்பித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே புதிதாக நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் தான் இந்த வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன. ஆகையால் தமிழ்நாட்டின் ஹாட்ஃபாட்டாக சென்னை மாறியுள்ளது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு நிலுவையில் இருக்கும் பட்சத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

இந்த நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு தங்களால் இயன்ற பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு தான் வருகிறது. இருப்பினும் கண்ணுக்குத் தெரியாத இந்த நாளுக்கு நாள் தன்னுடைய கோரத்தாண்டவத்தை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு ஒரே வழி சென்னையை மற்ற இடங்களில் இருந்து தனிமைப்படுத்தி சீல் வைப்பது மட்டும்தான் என்று அதிகாரிகள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பொருத்தவரையில் சென்னையை தவிர மற்ற இடங்களில் நோயின் தாக்கம் கட்டுக்குள் வந்து விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கடும் முயற்சிக்கு பின்பும் சென்னையை மட்டும் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

அதற்காகத்தான் சென்னையில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றும் விதமாக பல நடைமுறைகள் வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழகத்தின் மற்ற இடங்களுக்கு செல்வதற்காக வழங்கப்படும் இ பாஸ் சேவைகளும் நிறுத்தி வைப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை குறைத்து விடலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களை சோதனை செய்யும் பொழுது பத்தில் ஏழு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுகிறது.  

ஆகையால் சென்னைக்குள் வருவதையும் சென்னையை விட்டு வெளியே செல்வதையும் முற்றிலுமாக தடுக்க வேண்டும் என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். விரைவில் அதிகாரிகளின் ஆலோசனை முடிவு பெற்று இந்த வழிமுறையானது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.