சென்னையில் இன்னொரு அபிராமி! 6 வயசு மகனை கொன்று தீ வைத்து எரித்த கொடூர தாய்!

கொடூர தாய்


சென்னையில் பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் பரபரப்பு ஓய்வதற்குள் பெற்ற 6 வயது மகனை பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்து எரித்துள்ளார்.

   சென்னையை அடுத்த பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் மீனாட்சி. இவர் ஏழு வருடத்திற்கு முன்னர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஜெயகாந்தன் என்ற 6 வயது மகன் இருந்தார். கிருஷ்ணகிரியில் கணவனுடன் வசித்து வந்த மீனாட்சி அடிக்கடி சென்னை பூந்தமல்லியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

   கணவன் சரவணனுடன் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் கோபித்துக் கொண்டு பூந்தமல்லி வந்து தனது பெற்றோருடன் மீனாட்சி இருந்துள்ளார். நேற்று முன் தினமும் கணவன் சரவணனுடன் மீனாட்சி சண்டை போட்டுள்ளார். இதனை தொடர்ந்து மகனை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரியில் இருந்து பூந்தமல்லியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

  ஆனால் அடிக்கடி மகள் வீட்டுக்கு வருவதை பெற்றோர் விரும்பவில்லை. இதனால் மீனாட்சியை வீட்டுக்குள் அனுமதிக்க அவர்கள் மறுத்துள்ளனர். மேலும் உடனடியாக கிருஷ்ணகிரி செல்லுமாறு பெற்றோர் மீனாட்சியை விரட்டியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த மீனாட்சி தனது பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு பின்புறம் உள்ள மோட்டார் ரூமில் குழந்தையுடன் சென்று தங்கியுள்ளனர்.

   இன்று காலை மீனாட்சியை காணாத நிலையில் மோட்டார் ரூம் அருகே உள்ள ஒரு தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் தொட்டிக்குள் இருந்து மீனாட்சியின் மகன் ஜெயகாந்தனை தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர். மீனாட்சி மாயமான நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திடீரென தலையில் மொட்டை அடித்த நிலையில் வீட்டிற்கு சாதாரணமாக வந்த மீனாட்சி தனது மகனை தான் தான் கொலை செய்ததாக கூறி அதிர வைத்துள்ளார்.

   தற்கொலை செய்து கொள்ளச் சென்ற போது பயமாக இருந்த காரணத்தினால் வீட்டிற்கு திரும்பியதாக கூறி போலீசாரையே திணற வைத்துள்ளார். இதனை அடுத்து மீனாட்சியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் எவ்வித சத்தமும் இன்றி மீனாட்சி எப்படி அவளது மகனை கொலை செய்திருப்பாள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மகனை எரிக்க மீனாட்சிக்கு பெட்ரோல் எப்படி கிடைத்தது என்றும் விசாரணை நடைபெறுகிறது.

   மீனாட்சிக்கு கொலையில் வேறு யாரேனும் உதவினார்களா? எதற்காக பெற்ற மகனை கொடூரமாக மீனாட்சி கொலை செய்தார் என்றும் போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கள்ளக்காதலனுக்காக அபிராமி என்பவள் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொலை செய்த ஈரம் காய்வதற்குள் தற்போது மீனாட்சி என்பவள் கொடூர தாயாக வெளிப்பட்டுள்ளாள்.