காயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்! அதிசய நிகழ்வு!

மருந்தகத்திற்கு சென்ற தெருநாய் ஒன்று தனது காயத்திற்கு மருந்து போட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.


துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மருந்தகம் வைத்திருப்பவர் செங்கிஸ். செல்லப் பிராணிகள் மீது பாசம் கொண்ட செங்கிஸ் தனது மருந்தகத்தில் விலங்குகளுக்கு என்று தனியாக மெத்தை வசதி செய்து கொடுத்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள நாய்கள் போன்ற செல்லப் பிராணிகள் இந்த மெத்தையில் படுத்து உறங்க செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அவரது மருந்தகத்திற்கு கடந்த வாரம் ஒரு தெருநாய் ஒன்று வந்துள்ளது. வாயில்லா ஜீவனான அந்த நாய் மருந்தகத்தின் உரிமையாளரை தேடியது. உரிமையாளர் செங்கிஸ் வந்து அந்த நாய்க்கு என்ன ஆனது என்பது குறித்து ஆராய்ந்தார். அப்போது அந்த நாய் தனது காலை தூக்கி அவரிடம் காண்பித்தது. அப்போதுதான் செங்கிசுக்கு விவரம் தெரியவந்தது.

அந்த நாயின் காலில் காயம்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருப்பதை அவர் கண்டார். உடனடியாக அந்தக் காயத்திற்கு மருந்து போட்டு அவர் முதலுதவி அளித்தார். செங்கிசின் பாசத்தால் ஈர்க்கப்பட்ட அந்த நாய் அவரது கையை நாக்கால் தழுவி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது. இந்தக் காட்சிகள் அந்தக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. தற்போது இந்தக் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.