இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு பிள்ளையார் கோவிலுக்கு செல்லலாம் என்று சொன்னால் உங்களுக்கு உடனே உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும்.
எரிமலை உச்சியில் விநாயகர் ஆலயம்..! அதிசய ஆலய தரிசனம்

மனசெல்லாம் படபடக்கும். கண்டிப்பாக போய்த்தான் ஆகவேண்டுமா என்ற நடுக்கம் எழும். இத்தனையும் மீறி கோவிலுக்கு போனால் நெருங்க நெருங்க திகிலும் திணறலும் அதிகரிக்கும். காரணம் அந்த கோயில் அமைந்திருக்கும் இடம். எப்போது வேண்டுமானாலும் சீறி அனலை கக்கவும் பாறைக் குழம்பை கொட்டி வடியவிடவும், நெருப்பச் சிதறவைத்து நெருங்குவதை எல்லாம் சுட்டுப் பொசுக்கவும் தயாராக இருக்கும் எரிமலை ஒன்றிம் உச்சியில்தான் இருக்கிறது அந்தப் பிள்ளையார் கோவில்.
ஆற்றங்கரையிலும் அரச மர நிழலிலும் குளுகுளுவென்று குடியிருக்க விரும்பும் தும்பிக்கையான் உஷ்ணமான இடத்தில் உட்கார்ந்திருப்பது அதிசயம். அசுரர்களை அழிக்க அரனாரின் அனல்விழியில் இருந்து தோன்றியவன் ஆறுமுகன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அனலை அழிப்பதற்காகவே தோன்றியவன் ஆனைமுகன் என்பது தெரியுமா?
தர்மத்தின் தலைவனான எமதர்மனுக்கு தர்மத்தின் வடிவமாக ஒரு மகன் இருந்தான். அனலாசுரன் அவன் பெயர். தீயவர்களோடு சேர்ந்ததால் அவன் உடலே தீயாக மாறி போய்விட தகித்தான். அந்த வெம்மை தாளாமல் தவித்தவர்களை சாம்பலாக்கி சந்தோஷப்பட்டான். காலதேவன் மகன் என்ற தலைக்கனத்தோடு காலம் நேரம் இன்றி ஈரேழு பதினான்கு உலகங்களையும் சுற்றி வந்ததால் எங்கும் நெருப்பு, எதிலும் நெருப்பு, எல்லாம் நெருப்பாகி நாளுக்கு நாள் வேளைக்கு வேளை சாம்பல் ஆனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. அண்டமே அலற, தேவரும், யாவரும் மூவரை நாடினார்கள்.
முக்கண்ணனும் மூத்த மகனான ஒருவனை முக்கண்ணியே தோன்ற செய்வாள் என்று கூற அப்படியே நடந்தது. ஆற்றில் நீராடச் சென்ற அன்னை குளுகுளு மஞ்சளால் ஒரு குழந்தையை உருவாக்க, சிவனாரைத தடுத்து சிரம் அற்று பின் ஆனைத் தலைபெற்று கணபதி ஆனான்.
அந்தப் பிள்ளை யார் என்பதை அறிந்ததும் எல்லோரும் வேண்ட தாமதிக்காமல் புறப்பட்டார் பிள்ளையார். அடங்காமல் எரிந்துகொண்டிருந்த அனலாசுரனை அப்படியே அள்ளி விழுங்கினார். தும்பிக்கையானின் வயிற்றுக்குள் சென்ற பிறகு, சுடச்சுட எதையாவது உள்ளே விழுங்கினால் நமக்கு வியர்க்குமே அப்படி விநாயகருக்கும் வியர்த்தது. தேவர்கள் அறுகினால் அர்ச்சித்தார்கள். கொஞ்ச நேரத்தில் அப்படியே அடங்கிப்போனான். அனல் புனலாகி எங்கும் குளுமை பரவியது. அன்று முதல் அக்னியின் தாக்கம் எங்கே அதிகரித்தாலும் அதைத் தணிக்க ஆனைமுகனையே வேண்டத் தொடங்கினார்கள்.
இந்தப் புராணம் எல்லாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இந்தோனேசியாவில் எரிமலை உச்சியில் ஏகதந்தனுக்கு ஒரு சன்னிதி எழுப்பியிருக்கிறார்கள் ஜாவாவின் பூர்வகுடி இந்துக்கள். மவுண்ட் ப்ரோமோ என்றழைக்கப்படும் அந்த எரிமலையின் பெயர் படைக்கும் கடவுளான பிரம்மாவின் பெயரால் அழைக்கப் படுவதாக சொல்கிறார்கள்.
இந்த இடம் எரிமலைகள் நிறைந்த அபாயகரமானதாக இருந்தபோதும் த்ரில் பயணமாக சுற்றுலா பயணிகள் பலர் வருகிறார்கள். அப்போதெல்லாம் விநாயகருக்கு விசேஷ பூஜைகள் உண்டு. வருடத்துக்கு ஒருமுறை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து எரிமலை உச்சியில் இருக்கும் பிள்ளையாருக்கும் மலையின் அடிவாரத்தில் இருக்கும் கோயிலிலும் விசேச வழிபாடுகள் நடத்துகிறார்கள்.
விழாவின் முக்கிய வழிபாடாக எரிமலையின் உச்சியிலிருந்து மலைக்குள் தானியங்கள், பழம், பூ, பறவைகள் என்று பலவற்றையும் வீசுகிறார்கள். அப்படி எறிந்தால் எரியும் நெருப்பு மலைக்கடவுள் மனம் குளிர்ந்து வெண்மை தணிவார் என்றும், தாங்கள் வேண்டும் வரம் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். இதற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது
பதினைந்தாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னனும் அரசியும் வாரிசு இல்லாமல் வருந்தினார்கள் ஒருவரின் ஆலோசனைப்படி மலைக்கடவுளை வேண்டினார்கள். வேண்டும் வரம் அருளிய மலைக்கடவுள் இருபத்தைந்து குழந்தைகள் பிறக்கும் என்றும், அதில் கடைசிக் குழந்தையை தனக்குத் தந்துவிட வேண்டும் என்றும் சொன்னார்.
இருபத்தைந்தாவது குழந்தை கொள்ளை அழகுடன் பிறந்தது. ஆனந்தமடைந்த அரசனும் அரசியும் மற்ற குழந்தைகளை விட அதன் மீது அதிக பாசம் வைத்தனர். மலைகள் இருக்கும் பகுதியை குழந்தை நெருங்காமல் பார்த்துக் கொண்டனர். நாட்கள் நகர்ந்தன. பொறுமையாக இருந்த மலைக்கடவுள் பொங்கி எழுந்தார். தனது உக்ரத்தை உஷ்ணமான நெருப்புக் கரமாக நீட்டினார். குழந்தையை தானே எடுத்துக்கொண்டார். பதறிப் போனார்கள் அரசனும் அரசியும். அவர்கள் குழந்தைகளும் மக்களும் மனம் கலங்கினார்கள். அப்போது ஒரு குரல் எரிமலைக்குள் இருந்து நான் இங்கு நலமாக இருக்கிறேன். எனக்காக நீங்கள் வருந்த வேண்டாம். வருடத்துக்கு ஒருமுறை இந்த தினத்தில் உங்களால் இயன்றதை இங்கே அனுப்பி வையுங்கள். கேட்டது தங்கள் குழந்தையின் குரல் என்பதை புரிந்து கொண்டார்கள் அரசனும் அரசியும்.
அன்று முதல் யக்ஞ கசாடா என்ற பெயரில் ஆண்டுக்கு ஒருமுறை திரு விழா நடத்துகிறார்கள். அப்போது எரிமலைக்குள் எறியப்படும் பொருளில் எதையாவது பிடித்து எடுத்துக் கொண்டால் அது தங்களுக்கு புண்ணியம் சேர்க்கும் என்ற நம்பிக்கையோடு மலையின் சரிவில் உயிரை பணயம் வைத்து இறங்கி மேலிருந்து எறியப்படும் பொருட்களை வலைவீசி பிடிக்கிறார்கள்.
சதா சர்வகாலமும் புகையுடன் குமுறிக் கொண்டிருக்கும் அந்த எரிமலைகள் எப்பொழுது வேண்டுமானாலும் கொந்தளித்துக் கொதிக்கும் பாறைக் குழம்பை வெளியேற்றலாம். அப்படி நடந்தால் இந்தோனேசிய மக்களும் அங்கே உள்ள உயிர்களுக்கும் பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி ஏதாவது இடைஞ்சல் வந்தால் தும்பிக்கையான் தங்களைக் காப்பார் என்ற நம்பிக்கையோடு அவரை பெரிய மலையின் விளிம்பில் அமர்த்தித் துதிக்கிறார்கள் ஜாவனீயர்கள்.