45 வருடத்தில் முதல் முறை! மோடி ஆட்சியில் வேலையில்லா இளைஞர்கள் எண்ணிக்கை விண்ணை தொட்டது!

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த நிதி ஆண்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.


“இந்தியாவில் 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் உயர்ந்து விட்டது” என்று தேசிய மாதிரி ஆய்வு (நேஷனல் சேம்பிள் சர்வே) அமைப்பின் 2017-18 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.  குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பேரழிவினால் முதலில் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், பெண்களும்தான் என்பதை தற்போது வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

 

   கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டம் 17.4 சதவீதமாகவும், பெண்களுக்கு 13.6 சதவீதமாகவும் உயர்ந்து விட்டது. அதேபோல் நகரத்தில் உள்ள இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டம் 18.7 சதவீதமாகவும், பெண்களுக்கு 27.2 சதவீதமாகவும் உயர்ந்து விட்டது.

 

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மட்டும் 80 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு என்றைக்கு வேலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள். அதில் 24 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் மட்டும் 30 லட்சம் பேர் என்ற அதிர்ச்சித் தகவலை அரசின் இணைய தளத்திலேயே காண முடிகிறது. சுய தொழில்களை ஊக்குவிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அப்படியே முடங்கிப் போயுள்ளன.

 

 சுய தொழிலை ஊக்குவிப்பதில் தமிழகம் இந்திய மாநிலங்களில் கடுமையாக பின்தங்கி, 18 இடத்திற்கு கீழிறங்கி விட்டது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2015-16 ஆம் ஆண்டிலேயே தமிழகத்தின் வேலை இல்லாத் திண்டாட்டம் இந்திய சராசரியான 3.7 சதவீதத்தை விட அதிகமாகி, 3.8 சதவீதம் வரை சென்று இப்போது அது மேலும் உயர்ந்து விட்டது.

 

புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்காமல், அரசு வேலை வாய்ப்புகளிலும் முறைகேடான தேர்வுகள், லஞ்சம், லாவண்யம் என்ற அளவில் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் பெருத்த ஏமாற்றத்தில் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

   இந்த வேலை இல்லா திண்டாடட்ட புள்ளி விவரமானது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த புள்ளி விவரம் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. அப்படி என்றால் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட வேண்டியது தானே என்கிற குரலும் எழுந்துள்ளது.