சிங்கப்பூர் காதல்! பிலிப்பைன்ஸ் பெண்ணை மனைவியாக்கிய சிவகங்கை காளையன்!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்திருக்கும் தயாபுரத்தை சேர்ந்தவர் நிர்வின். இவர் சிங்கப்பூரில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். நிர்வின் பணியாற்றி வரும் அதே கம்பெனியில் மேரிஜேன் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பணியாற்றி வந்துள்ளார்.

முதலில் நட்பாக ஆரம்பித்த இவர்களது உறவு பழகப்பழக காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரது காதலைப் பற்றியும் அவரவர் தங்களது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறி இருக்கின்றனர். இதனையடுத்து நிர்வினின் பெற்றோர் தங்கள் மகனின் காதலுக்கு பச்சைகொடி காட்டி இருக்கின்றனர்.

பின்னர் மேரிஜேன் வீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள முருகன் கோவிலில் வைத்து தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. காதலினால் வெவ்வேறு இரண்டு நாடுகளை சேர்ந்த இருவர் ஒன்றிணைந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மணமக்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.