அமெரிக்காவில் பயங்கர தீ! ஒரே குடும்பத்தின் இந்திய சிறார் 3 பேர் பலி!

அமெரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்தியாவை சேர்ந்த சிறுவர் சிறுமியர் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர்.


   இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பாதிரியார் நாயக். இவர் தனது மகன்ஆரன் நாயக், மகள்கள் ஷரன் நாயக், ஜாய் நாயக் ஆகியோரை அமெரிக்காவில் உள்ள டென்னசி மாகாணத்திற்கு கிறிஸ்தவ மதம் தொடர்பான படிப்பை படிக்க அனுப்பி வைத்திருந்தார். இந்த மூன்று பேரையும் அங்குள்ள பிரான்ஸ் கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தனது வீட்டில் தங்க வைத்திருந்தார்.

   அங்கு தங்கியபடியே ஆரன், ஷரன் மற்றும் ஜாய் கிறிஸ்தவ மதம் தொடர்பான பாடங்களை படித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த இரண்டு அடுக்கு மாடி வீட்டில் கடந்த ஞாயிறன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயில் சிக்கி வீடு நாசமானது. இரவு நேரத்தில் தீ பிடித்த காரணத்தினால் உள்ளே இருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

   தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ முற்றிலுமான பரவி வீட்டை நாசப்படுத்தியது. இந்த கோர விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மூன்று பேரும், பாதிரியாரும் உயிரிழந்தனர். பாதிரியாரின் மனைவி மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஞாயிறன்று நடைபெற்றிருந்தால் உயிரிழப்பு அண்மையில் தான் உறுதி செய்யப்பட்டது.

   மூன்று சிறார்களின் உயிரிழப்புக்கு டென்னசி மாகான பிரான்ஸ் சபை இரங்கல் தெரிவித்துள்ளது. தங்கள் குழந்தைகளின் உடலை பெறுவதற்காக பாதிரியார் நாயக் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனிடையே தீ விபத்துக்கான காரணம் குறித்து டென்னசி மாகான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.