மாணவியை மனைவியாக்கிய இந்திய பேராசிரியருக்கு கிடைத்த நோபல் பரிசு! சுவாரஸ்ய நிகழ்வு!

தன்னுடைய மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்திய பேராசிரியர் அபிஜித் பானர்ஜி தனது மனைவியுடன் இணைந்து நோபல் பரிசை பெற உள்ளார்.


பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறிய பொருளாதார பேராசிரியர் அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுப்ளோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் கிரம்மர் ஆகிய மூன்று பேர் கூட்டாக நோபல் பரிசு பெற உள்ளனர்.

இவர்களில் அபிஜித் இந்தியாவின் கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்டவர். கொல்கத்தா பிரசிடன்ஸி காலேஜில் பட்டம் பெற்றார். பிறகு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற அபிஜித் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டம் பெற்று டாக்டரானார். இதன் பிறகு அமெரிக்கா சென்ற அபிஜித் அங்குள்ள மசாட்சூசட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

அபிஜித்தின் முதல் மனைவி எம்ஐடியில் பேராசிரியை ஆவார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. ஆனால் இவர் அமெரிக்காவில் பணியாற்றச் சென்ற போது அவருக்கு அங்கு கல்வி பயில வந்த பிரான்சை சேர்ந்த எஸ்தருடன் காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து 2015ம் ஆண்டு தனது முதல் மனைவியை அபிஜித் விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு 2015ம் ஆண்டு எஸ்தர் - அபிஜித் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு முன்னதாகவே அபிஜித் - எஸ்தர் ஜோடி குழந்தை பெற்றுக் கொண்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் தான் தற்போது அவர்களுக்கு நோபல் பரிசை வென்று கொடுத்துள்ளது. உலகில் வறுமையை ஒழிப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சி புத்தகத்தின் சிறப்பை பாராட்டியே நோபல் கொடுக்கப்பட உள்ளது.