இலங்கை அணியை சம்பவம் செய்த இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள்! டி-20 தொடரை வென்று இந்தியா அபாரம்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.


டாஸ் வென்ற இலங்கை அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் ஷிகர் தவான் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இருவரும் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் மனிஷ் பாண்டே மற்றும் ஷர்டுள் தகூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ரன்களை மளமளவென உயர்த்தினர். அதிரடியாக ஆடிய தாகூர் 8 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். மனிஷ் பாண்டே 18 பந்துகளில் 31 ரன்களை குவித்தார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா மட்டும் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை எடுத்த நவதீப் சைனி தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.