மீண்டும் சூப்பர் ஓவர்! பரபரப்பான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி! மீண்டும் கோட்டைவிட்ட நியூசிலாந்து அணி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 50 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லோகேஷ் ராகுல் 39 ரன்களை எடுத்தார். நியூசிலாந்து அணியின் சோதி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் மொன்றோ சிறப்பாக விளையாடிய 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சைபர்ட் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இவர் சிறப்பாக பந்துவீசி முதல் 5 பந்துகளில் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியினர் 1ரன் மட்டும் எடுத்து ரன் அவுட் ஆகினர். இதனால் கடைசி போட்டியைப் போலவே இந்த போட்டியில் டிராவில் முடிந்து சூப்பர் ஓவரை நோக்கி சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 13 ரன்களை எடுத்தது.

14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்களை விளாசி ஆட்டம் இழந்தார். பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.