மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று பழியைத் தீர்த்த இந்திய அணி!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்க முதலே மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை விளாசினார். சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா மற்றும் லோகேஷ் ராகுல் சதம் அடித்தனர்.

லோகேஷ் ராகுல் 102 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட்கோலி வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 19 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிலைத்து நின்று ஆடாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக அந்த அணியின் சாய் ஹோப் 78 ரண்களும், போரான் 75 ரன்களும் எடுத்தனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.