திரல்லான பைனலில் தெறிக்க விட்ட கோஹ்லி, ஜடேஜா! தொடரை கைப்பற்றி மாஸ் காட்டிய இந்திய அணி!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.


இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கட்டாக்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர்கள் ஆட்டம் போகப்போக அடித்து ஆட ஆரம்பித்தனர். குறிப்பாக பூரன் மற்றும் கிரன் பொல்லார்ட் ஜோடி அபாரமாக விளையாடி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. அபாரமாக விளையாடிய பூரன் 64 பந்துகளில் 89 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

பொலார்ட் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்து மேற்கிந்திய தீவுகள் அணி 315 ரன்களை குவிக்க உதவினார்.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவதீப் சைனி 2 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 63 ரண்களுக்கும், லோகேஷ் ராகுல் 77 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா வீரர்களுடன் இணைந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். எனினும் மூன்று ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால் ஆட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் தாக்கூர் அதிரடியாக ஆடி பவுண்டரிகளை விளாசினார். இதனால் இந்திய அணி 48.4 போர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

இதனால் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.