ஆஸ்திரேலிய பவுலர்களை கதற வைத்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி! தொடரை வென்று இந்தியா சாதனை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் நிலைத்து நின்று ஆடாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் சிறப்பாக ஆடி அந்த அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்மித் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

அவர் ஆட்டமிழந்த பிறகு ஆஸ்திரேலிய அணி ரன்களை குவிக்க முடியாமல் திணறினர். அவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்களை எடுத்தது. 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 119 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராத் கோலி 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 44 ரன்களை எடுத்தார்.

இதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.