அரசு ஊழியர்களுக்கு மேலும் மேலும் சலுகைகள்... கோட்டையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் ஆதரவு.

அரசு ஊழியர்களின் கைகளைக் கட்டிப் போடாமல், சுதந்திரமாக இயங்க அனுமதிப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுவே தி.மு.க. ஆட்சி என்றால், அரசு ஊழியர்களின் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்பட்டு, காசு புடுங்கப்படும்.


இப்போது அப்படியொரு நிலைமை இல்லை என்பதால் அரசு ஊழியர்கள் மனம் மாறும் நிலை ஏற்பட்டு வருகிறது. போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்ததுதான் எடப்பாடி அரசின் மீது ஊழியர்களுக்கு கோபத்தை உருவாக்கியது.

அதை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டார். அதாவது, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி புதிய ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள், 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும், வழக்குகளையும் திரும்ப பெற, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்த நிலையில், ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று ’மறப்போம்; மன்னிப்போம்’ என்ற அடிப்படையில், மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு கைவிடுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். எடப்பாடியின் இந்த அறிவிப்பு அவர்களை ஆனந்த கூத்தாட வைத்துள்ளது.

அதேபோன்று இப்போது, அரசு ஊழியர்களுக்கான வீட்டுக்கடன் மற்றும் முன்பணம் பெறும் வரம்பை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசில் பணியாற்றும் அகில இந்திய சேவைப்பிரிவு அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள், மாநில அரசு அலுவலர்களுக்கு தமிழக அரசின் வீட்டுவசதித் துறை வாயிலாக வீட்டு மனை வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் அல்லது முன்பணம் வழங்கப்படுகிறது. இதுவரை, சேவைப்பிரிவு அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ.40 லட்சம், தமிழக அரசு அலுவலர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சமாக இருந்துவந்தது.

இதைத்தான், சேவைப்பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாகவும், தமிழக அரசு அலுவலர்களுக்கு அதிகபட்சம் ரூ.25லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாகவும் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து மூன்று ஜாக்பாட்களை அள்ளி வீசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

அதனால், தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றமும், எடப்பாடி மீதான அவர்களது நன்றி உணர்வும் அதிமுகவுக்கு சாதகமாக மாறி உள்ளதாகத் தெரிகிறது. இது தேர்தலிலும் எதிரொலிக்கும்.