கலால் வரி உயர்வு - காங்கிரஸ், கம்யூ. கட்சிகள் சொல்வது என்ன?

உலக பெட்ரோலிய சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாதியளவுக்குக் குறைந்தபோதும் இந்தியாவில் அதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை:

”சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஒரு பீப்பாய் 61.13 டாலராக இருந்தது. அப்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 78.12 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 71.86 ஆகவும் இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை 32 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.57 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.49 ஆகவும் விற்கப்பட வேண்டும். ஆனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 72.57 ஆகவும், டீசல் விலை ரூபாய் 66.2 ஆகவும் உள்ளது. இத்தகைய விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசின் தவறான கொள்கைகள் தான். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலன் மக்களுக்கு சென்றடைகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பா.ஜ.க. அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 2 இல் இருந்து 8 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 2 இல் இருந்து ரூபாய் 4 ஆகவும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதைத் தவிர, சாலை வரி ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூபாய் 1 ஆகவும், டீசலில் ரூபாய் 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22.98 ஆகவும், டீசலுக்கு ரூபாய் 18.83 ஆகவும் கடுமையாக உயர்த்தியிருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை 9 முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு ரூபாய் 39 ஆயிரம் கோடி கூடுதல் வருமானத்தை கலால் வரி மூலம் பெற்றிருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சி அமைந்த போது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 3.56 ஆக மட்டுமே இருந்தது. இதன்மூலம், பெட்ரோலில் ரூபாய் 13.50 மற்றும் டீசலில் ரூபாய் 15.27 கூடுதலாக கலால் வரி விதித்து மத்திய அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதைவிட மக்கள் விரோத செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. 

எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் ஏற்பட்டிருக்கும் பலனை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து மக்கள் மீது இருக்கும் சுமையைத் தவிர்க்க கூடிய நடவடிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்திருக்க வேண்டும். இதன்மூலம் விலைவாசிகள் குறைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆனால், கடுமையான நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க கலால் வரியை விதித்து, மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றி, துன்பத்திற்கு ஆளாக்கும் மத்திய பாஜ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வேண்டும்.” என்று அழகிரி தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

மார்க்சிய கம்யூனிசக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

” பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் லிட்டருக்கு ரூ. 4 வரை விலை உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் போது, பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பதற்கு மாறாக, நரேந்திர மோடி அரசு வழக்கம் போல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல் மீதான கலால் வரி 18.98 காசாக இருந்ததை ரூ. 22.98 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ. 14.83 காசாக இருந்ததை ரூ. 18.83 காசாக உயர்த்தியுள்ளது.

இதற்கு மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிற்கும் சாலை வரியாக லிட்டருக்கு ரூ. 1 உயர்த்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அரசு பதவியேற்ற போது, சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் போது அதனுடைய பலன் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் என அறிவித்தார்.

ஆனால் தற்போது அதற்கு மாறாக பிஜேபி ஆட்சிக்கு வந்த 2014க்கு பிறகு சர்வதேச சந்தையில் பலமுறை வீழ்ச்சி ஏற்பட்ட போதும் அதற்கேற்றார் போல் விலையை குறைக்காமல் பெட்ரோல் மீதான கலால் வரி 142 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரி 429 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது பொருளாதாரம் மந்த நிலை ஏற்பட்டுள்ள நேரத்தில் கரோனா தொற்று குறித்து மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ள நேரத்தில் பெட்ரோலிய பொருட்களின் வீழ்ச்சியை மக்களுக்கு சாதகமாக குறைப்பதற்கு பதிலாக மோடி அரசு மீண்டும், மீண்டும் கலால் வரியை உயர்த்தி விலையேற்றத்தை செய்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வரும் மோடி அரசு, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் - டீசல் விலை வீழ்ச்சியின் பயனை சாமானிய மக்களுக்கு வழங்க மறுக்கிறது.

எனவே மத்திய அரசு உயர்த்தியுள்ள கலால் வரியை திரும்ப பெறுவதுடன், சர்வதேச சந்தை விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சில்லறை விற்பனையில் 30 சதவிகிதம் அளவில் குறைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.” என்று கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.