வருமான வரிக்கணக்கு தாக்கல்! அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு! எப்போது வரை தெரியுமா?

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.


கடந்த 2018-2019 நிதி ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கலுக்கான அவகாசம் வரும் 31ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. அதாவது மாத ஊதியதாரர்கள், வீடுகள் மூலமாக வருமானம் பெறுபவர்கள், இதர தொழில் செய்பவர்கள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.

முன்பு போல் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று பலரும் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பார்ம் 16 என்று சொல்லப்படக்கூடிய வருமான வரிக்கணக்கு தாக்கலுக்கான முக்கிய ஆவணம் பல்வேறு நிறுவனங்களில் தற்போது வரை ஊழியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதில் சிக்கல் எழுந்தது.

இந்த நிலையில் தான் வருமான வரிக்கணக்கு தாக்கலுக்கான நாளை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த ஆண்டும் இதே போல நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.