ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கம்! இறைவனுக்கு வெந்நீர் அபிஷேகம்! அதிசய திருத்தலம் இது!

திருவண்ணாமலை மாவட்டம் போளுரை அடுத்துள்ள (தேவி வழிபட்ட) தேவிகாபுரத்தில் விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட கலை நயம் மிக்க சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய சிவன் கோவில் உள்ளது.


இங்கு சிவ பெருமான் பொன்மலை நாதர் கனககிரிஸ்வரர் என்ற பெயரிலும் அம்பாள் பெரிய நாயகி பிரஹன்ன நாயகி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மலைமீதுள்ள கனககிரிஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படும் வெந்நீரை தீர்த்தமாக உட்கொண்டால் ரத்த சம்பந்தமான நோய்களும் தீராத நோய்களும் தீரும் என்பதும் மனத்துயரம் நீங்கி வாழ்வில் வளமும் நலமும் தருபவராகவும் அருள்பாலிக்கிறார்.

இங்கு அம்பாள் குழந்தை வரம் கல்யாண வரம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை குழந்தை இல்லாத தம்பதிகள் மனமுருக வேண்டிக்கொண்டு விளக்கேற்றி கோவிலை சுற்று வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் பால், தயி,ர் இளநீர், எண்ணெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். இங்கு தல விருட்சம் வில்வ மரமும் தீர்த்தம் சிவ தீர்த்தமும் உள்ளது.

ஒரு சமயம் அன்னையும் அப்பனும் கயிலைமலையில் வீட்டிறிருக்கும்போது அங்கு வந்த பிரிங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கி சென்றார். அதனை கண்டு வருத்தமடைந்த அன்னை இறைவனை நோக்கி வணங்கி ஐயனே தங்கள் உடலில் சரிபாதியை எனக்கு தரவேண்டும் என்று வேண்டினாள்.

சிவனும் சக்தியை நோக்கி பெண்ணே நீ பூவுலகம் சென்று காஞ்சியபதியில் (காஞ்சிபுரம்) காமாட்சி என்ற பெயருடன் தவமிருந்து என்னை பூஜித்து வா. உரிய காலத்தில் உன்னை மணந்து கொள்வேன். பின்னர் திருவருனை (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும்போது உமக்கு இடபாகம் தருவேன் என்று உறுதி அளித்தார். அன்னையும் காஞ்சிபுரம் வந்து ஏகாபரநாதரை மணந்தார்.

பின்னர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டலம் தங்கி இங்குள்ள கனககிரி நாதரை வணங்கி தவமிருந்தார். அதனால் இத்தலம் தேவிகாபுரம் என்று பெயர் பெற்றது. 500 அடி உயரமும் 5 கி.மீ. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனககிரி என்றும் பெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இவரை கனககிரீஸ்வரர் என்றும் பொன்மலை நாதர் என்றும் அழைக்கின்றனர்.

அம்பிகை பெரிய நாயகிக்கு இங்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்பாள் ஈசனை சரிபாதியாக அடைவதற்கு இந்த இடத்தில் தவம் இருந்ததால் திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்தால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அம்பாளின் தவத்தில் மயங்கிய சிவன் பங்குனி உத்திரத்தன்று, மலையில் இருந்து கீழே இறங்கி வந்து அம்பாளை திருமணம் செய்தார் என்பது ஐதீகம்.

மலையின் உச்சியில் வேடன் ஒருவன் கிழங்கினை வெட்டி எடுப்பதற்கு கோடாரியால் பூமியை தோன்றிய போது அந்த இடத்திலிருந்து இரத்தம் வெளியேறியது. அந்த இடத்தில் என்ன இருக்கின்றது என்பதை தோண்டி பார்த்த வேடனுக்கு லிங்கம் ஒன்று கிடைத்தது. ஆனால் அதிலிருந்து வெளிவந்த இரத்தமானது நிற்கவே இல்லை.

அந்த இரத்தத்தை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும் இரத்தம் பாய்ந்து கொண்டே இருந்தது. கடைசியாக வெந்நீரை எடுத்து லிங்கத்தின் மீது வேடன் ஊற்றினான். அப்போதுதான் இந்த இரத்தமானது நின்றது. அன்று முதல் இன்று வரை சிவனுக்கு வெந்நீரில் தான் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த வேடன் கதைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை செவி வழியாக கேட்கப்பட்ட கதைதான் இது.

மலையின் உச்சியில் உள்ள கனககிரீஸ்வரர் திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். இதற்கான ஒரு கதையும் உண்டு. ஒருமுறை இந்த கோவிலின் வழியாக போருக்குச் சென்ற பல்லவ மன்னன் இச்சிவன் கோவிலின் பெருமையை பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றான். பல்லவ மன்னன், தான் போரில் வெற்றி பெற்றால் மலையின் மேல் உள்ள சிவனுக்கு பெரிய கோயில் கட்டி தருவதாக வேண்டிக் கொண்டான்.

போரில் வெற்றி கண்ட பல்லவ மன்னன் தன் வேண்டுதலை மறந்து விட்டான். பிறகு மன்னனுக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டது. அப்போதுதான் ஈசனுக்கு, கோவில் கட்டி தருவதாக சொன்னது நினைவுக்கு வந்தது. பல்லவ மன்னன் சிவனுக்காக கோயிலை கட்டிய போது வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் திடீரென்று காணாமல் போய்விட்டது.

வருத்தத்தில் இருந்த பல்லவ மன்னன் காசியிலிருந்து மற்றொரு லிங்கத்தைக் கொண்டு வந்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுகணமே சுயம்புலிங்கம் திரும்பவும் காட்சி தந்தது. கடவுளை மறந்த பல்லவ மன்னனை, ஈசன் மறந்து இருக்கிறார் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

பல்லவ மன்னன் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு கனககிரிஸ்வரர் என்ற பெயர் வைத்து அதே கருவறையில் இரண்டு மூலவர்கள் வைத்து இன்றளவும் வழிபட்டு வருகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள அம்பாளை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஈசனை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும்.