நெய்நந்தீஸ்வரர்... செல்வம் தரும் தனப்பிரியரை தரிசிக்க வாருங்கள்

புதுக்கோட்டையில் இருந்து 45 கி.மீ. தொலைவில், பொன்மராவதி அருகில் வேந்தன்பட்டி இருக்கிறது.


இந்தியாவில் வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத நெய் நந்தீசுவரர், வேந்தன்பட்டியில் இருக்கிறார். இந்த நந்தீசுவரரை வழிபட்டால் அனைத்து தோஷமும் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக, பிரதோஷ காலத்தில் வந்து வழிபட கைமேல பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இங்குள்ள நந்திக்கு நாள்தோறும் உடல் முழுக்கப் பசு நெய் பூசப்படுகிறது. வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பு, இது. இதனால் நெய் நந்தீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

பிரதோஷ நாளில், இந்த நந்தீஸ்வரருக்கு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படுகின்றது. அன்று நந்தீஸ்வரருக்கு பசு நெய்யினால் அபிஷேகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் செய்த நெய், அவரது தோற்றம் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கின்றது. மறுநாள் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நெய்க்கிணற்றில் கொட்டுகிறார்கள்.

நந்தீஸ்வரரை வணங்கவே தமிழ்நாடு முழுவதுமிருந்து இங்கு பக்தர்கள் வருகிறார்கள். நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சக்கரம் இருக்கிறது. இது இந்த நந்தியின் மற்றொரு சிறப்பு. பக்தர்கள் நந்தியின் கொம்புகள் இடைவழி வழியே இறைவனை வழிபடும் காட்சியை இங்கே காண முடியும். இதனால் அதிகப் பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த நந்திக்கு `தனப்ரியன்' என்ற ஒரு பெயர் உண்டு. அதனால் பக்தர்கள் ஸ்ரீநெய் நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டுகளாக வைப்பதையும், பண நோட்டுகளை கயிற்றில் கட்டி நெய் நந்தீஸ்வரரின் கழுத்தில் மாலையாகப் போடுவதையும், வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும், தை மாதத்தில் மாட்டுப் பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நெய் நந்தீஸ்வரருக்கு `நந்தி விழா' நடத்தி வருகின்றார்கள். நந்தி விழா தினத்தன்று ஸ்ரீ நெய் நந்தீஸ்வரருக்கு அபிஷேகங்கள் செய்து 21 வகையான மாலைகளால் அழகுப்படுத்தி பல்வேறு தீப ஆராதனைகள் நடத்துகின்றனர். நந்தி விழா என்னும் பெயரில் அதிகாலைப் பொழுதில் ஸ்ரீ நெய் நந்தீஸ்வரரை வழிபடுகின்ற இந்த வைபவம் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று.

வேந்தன்பட்டியில், கச்சேரிக்கூடம் என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தில் ஸ்ரீநெய் நந்தீஸ்வரர் சுயம்புவாகத் தோன்றி உள்ளார். மிகப் பழமை வாய்ந்த இந்த வேப்ப மரத்தில் ஸ்ரீ நெய் நந்தீஸ்வரரின் முகம் தெளிவாக, அழகாகத் தோன்றியிருப்பது அதிசயமான ஒன்றாகும். இதை வேப்ப மரத்து நந்தி என்று அழைக்கின்றனர்.