ஐயப்ப விக்கிரகத்தின் கால்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்? ஆன்மிக விளக்கம் இதோ!

ஐயப்பனின் கால்களில் காணப்படுவது கட்டு அல்ல யோகப் பட்டம். ஐயப்பன் யோக நிலையில் இருப்பதால், அவர் காலில் கட்டப்பட்டுள்ள பட்டம் யோகப் பட்டம் எனப்படும்.


இதே மாதிரியான யோகப் பட்டத்தை, நீங்கள் யோக நரசிம்மர், யோக தட்சிணாமூர்த்தி போன்ற யோக நிலையில் அருளும் தெய்வ மூர்த்தங்களிலும் காணமுடியும்.

பகவான் சாஸ்தா இயற்கையாகவே யோகேஸ்வர ஸ்வரூபத்தில் உள்ளார். கந்தப்புராணம் மற்றும் பத்மபுராணங்கள் சாஸ்தாவை யோகேஸ்வரன் என்கின்றன. அவரை வீரம், கம்பீரம் போன்ற கோலங்களில் அச்சங்கோவில், ஆரியங்காவு கோவில்களில் காணலாம். சபரிமலையில், யோக நிலையில் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் முகமாக உள்ளார்.

ஏனென்றால், அது மகா யோகபீடம் பகவான் அங்கே தவக்கோலத்தில் இருக்கிறார். அதனால்தான் யோகப் பட்டம் அவர் காலில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலை ஹரிவராசனம் எனப்படும். அதாவது இரண்டு கால்களும் பின்புறமும் நிலத்தில் அழுத்தியிருக்க, முதுகு எலும்பை நேராக நிலைநிறுத்தி அமர்ந்திருக்கிறார் ஐயப்பன். இந்த யோகநிலையில் உடலை நிறுத்துவதற்கு யோகப் பட்டம் பயன்படுகிறது. மற்ற கோவில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் தரிசிக்கலாம்.

இந்த திருக்கோலத்தில், சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மற்றொரு கால் மடித்தப்படியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்து கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப் பட்டம் எனப்படும்.