மின்சாரம் தாக்கி பலி! பிரேதப் பரிசோதனையின் இதயம் துடித்து உயிர் பிழைத்த இளைஞன்! ஆனால் அடுத்து நேர்ந்த பரிதாபம்!

மருத்துவர்களால் உயிரிழந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்ட நபருக்கு பிரேதப் பரிசோதனை செய்ய இருந்த நிலையில் அவர் இதயம் துடிப்பது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா ஓரன். இவருக்கு வயது 26. இவர் தனது வீட்டில் உள்ள கூரையை மாற்றும் பணியில் ஈடுபட்டுவந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று இவர் மீது மின்சாரம் பாய்ந்துதால் பதறிய இவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் ஜிதேந்திரா ஓரணை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

இதன் காரணமாக அவரது உடலை RIMS என்ற மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லவும் அந்த மருத்துவர்கள் கூறினர். இதன் காரணமாக அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக அந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் இறந்தவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய தொடங்கும் முன்பு ஜிதேந்திரா ஓரனின் இதயம் துடிப்பதை அங்கிருந்த ஊழியர் ஒருவர் கவனித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர் மருத்துவர்களுக்கு இதைப் பற்றி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது உயிரைக் காப்பாற்ற சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி ஓரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கூறுகையில், மருத்துவர்களின் அலட்சியமே இந்த சம்பவத்திற்கு காரணம். ஓரன் இறந்து விட்டதாக கூறப்பட்ட பின்னர் சுமார் 5 மணி நேரம் வரை அவருக்கு உயிர் இருந்துள்ளது. ஆம்புலன்சில் வந்த நேரம் மற்றும் மருத்துவமனை பிண கிடங்கில் வைக்கப்பட்ட நேரம் என பல மணி நேரம் வீணாகி விட்டது. மருத்துவர்கள் முதலிலேயே அவர் உயிருடன் இருந்ததை கண்டறிந்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் அவர்கள் கூறினர்.

ஓரன் இறந்துவிட்டார் என கூறிய மருத்துவர்கள் சார்பில் பேசிய மருத்துவமனை நிர்வாகம் ஓரணை பரிசோதித்த போது அவருக்கு இதயத்துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு இல்லை. எனவேதான் அவர் உயிரிழந்ததாக நாங்கள் அறிவித்தோம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.