பொதுவாக ஆலயங்களில் இந்த சயன நிலையில் சேவை புரிவார் பெருமாள்.
நந்தவனத்தில் நாகர்! சூரிய பீடம், ஷட்கோண சுதர்சன சக்கரம்! பாபம் தீர்க்கும் இவை எல்லாம் எந்த திருக்கோயிலில் இருக்கிறது தெரியுமா?
அவர் புற்று வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள தலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அகரம். இங்குள்ள சென்றாய பெருமாள் கோவில் வணிகர்களால் கட்டப்பட்டு பராமரிப்பில் இருந்தாலும் ஊரின் பொதுக்கோயிலாக பெரும் சிறப்புகளைத் தாங்கி அனைவரையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி வருகிறது
நந்தவனம் தும்பிக்கை ஆழ்வார் சன்னதி, ஆஞ்சநேயர் உருவம் பொறிக்கப்பட்ட கொடி மரம், பந்தல் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், ஆஞ்சநேயர் சன்னதி, கருடாழ்வார் சந்நிதி, கருவறையுடன் கிழக்கு நோக்கி அமைந்த கோயில். கருவறையில் புற்று வடிவில் சென்றாய பெருமாள் வீற்றிருக்கிறார்.
மூலவரின் பின்புறச் சுவரில் பெருமாளின் நேர்த்தியான திருவுருவம் பொறிக்கப்பட்ட பித்தளைத்தகடு பதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கோயில் நந்தவனத்தில் இருந்து நாகங்கள் மூலஸ்தானத்தில் உள்ள புற்றுக்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனவாம். தற்போது நாகங்களை காண்பது குறைந்து விட்டாலும் இன்றும் நந்தவனத்தில் வடமேற்கு மூலையில் நாகங்கள் வசித்து வருகின்றன.
இக்கோயிலின் சிறப்புகளாக பல விஷயங்கள் இருந்தாலும் இங்கு அனைவரையும் கவர்வது நந்தவனத்தில் நாகரை மையமாகக்கொண்ட ஸ்வஸ்திக் எனப்படும் தெய்வீக அமைப்பும் அதன் மையத்தில் வட்ட வடிவ பீடத்தில் அமைந்துள்ள ராஜ கிரகமான சூரியபீடமும் அதன் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஷ்ட்கோண சுதர்சன சக்கரமும்தான்.
பெருமாளிடம் பக்தர்களின் கோரிக்கைகளை தெரியப்படுத்தி அவற்றை நிறைவேற்றித் தருவதில் சுதர்சன சக்கரத்துக்குப் பெரும்பங்கு உண்டு. ஆகவே தான் திருமாலின் வலக் கரத்தில் சுதர்சன சக்கரம் இடம்பெற்றுள்ளது. பக்தர்களின் நலனுக்காக ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் அருள் ஆசியுடன் இங்கு சுதர்சன சக்கரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் சுற்றுப்புற மேற்கூரையைச் சுற்றி 108 திவ்யதேசத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவுருவப்படங்கள் அழகுற அமைந்துள்ளன. நந்தவனத்தில் நாகர் சிலையின் பின்புறம் லஷ்மி ஹயக்ரீவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
சுதர்சன சக்கரம் அமைந்துள்ள பீடத்தை ஒன்பது முறை ஒன்பது வாரங்கள் வலம் வந்து பிரார்த்தனை செய்தால் சகல கிரகதோஷங்களில் இருந்து விடுபடலாம். இதனால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம், தனலாபம், ஆரோக்கியமான வாழ்வு பெற்று சுபிட்சம் பெறுவது உறுதி என்கின்றனர் பலன் பெற்றவர்கள்.
இக்கோயிலின் சிறப்புகளை பெருமாளே மனமுவந்து ஏற்றுக் கொண்டதற்கு சான்றாக நந்தவனத்தில் ஒரு வேப்பமரம் ஐந்து பிரிவுகளாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்த அதிசய வேப்பமரத்தை சுயம்பு பஞ்சமுக சென்றாயனாக பக்தர்கள் வணங்குகின்றனர். தினசரி வழிபாடு, அமாவாசை, பௌர்ணமி, தமிழ்ப்புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை திருநாள் உட்பட பல்வேறு நாட்கள் இங்கு சிறப்பிக்கப்படுகிறது.