காசி நகர் புனித யாத்திரைகளுக்கு பெயர் பெற்ற ஒரு ஸ்தலம். காசியில் மரணித்தால் முக்தி என்று காலம் முடிந்த பல பேர் இங்கு வந்து மாய்ந்தும் போகின்றார்கள்.
காசியில் ஏன் கருடன் பறப்பதில்லை, பல்லி ஏன் சத்தமிடுவதில்லை? காரணம் இதுதான்.
இங்குள்ள அரிச்சந்திர காட்டில் எப்போதும் பிணங்கள் எரிந்த வண்ணம் உள்ளன. 1785இல் கட்டப்பட்ட இந்த கோவில் சிவன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள மிகப்பெரிய ஆலய மணி ஒன்றை அடிக்கும் போது அதன் ஓசை பல தூரம் வரை கேட்கும். பூஜை நடைபெறும் சமயத்தில் நூற்றுக்கணக்கான மேளதாளங்கள் மற்றும் மணியோசைகள் எழுப்படும் போதே பக்தர்கள் இறைக்குள் மூழ்கி போவார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த காசியில் இன்றும் சில அதிசயங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. காசி மாநகரில் எங்கும் பல்லிகள் சப்தமிடுவதில்லையாம். பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் இடத்தில் கருடன் பறந்து கொண்டிருப்பது இயல்பான ஒன்றே. ஆனால் இங்கு கருடன் பறப்பது இல்லையாம். இதற்கு ஒரு வரலாறு உண்டு.
ஸ்ரீ ராமர் இராவணனை வென்ற பின் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என்பதற்காக ராமேஷ்வரத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட எண்ணினார். எனவே ஹனுமனை காசியில் இருந்து ஒரு லிங்கத்தை கொண்டு வரும்படி கேட்டு கொண்டார். உடனே காசியை அடைந்த ஹனுமார் வியந்து நின்றார். எங்கும் பார்த்தாலும் லிங்க மயமாக இருந்தது. அதில் சுயம்பு லிங்கம் எது என தெரியாமல் விழித்தார்.
செய்வதறியாது இருந்த தருவாயில் ஒரு கருட பட்சி லிங்கம் ஒன்றின் மேல் பறந்து வட்டமிட்டு குறிப்பால் உணர்த்தியது. அதை ஆமோதிப்பது போல் பல்லி ஒன்றும் சப்தமிட்டது. சுயம்புவை அறிந்த கொண்ட மகிழ்ச்சியில் ஹனுமார் அந்த லிங்கத்தை பெயர்த்து எடுத்து அங்கிருந்து கிளம்பினார். அப்போது எதிர்பட்ட கால பைரவர் ஹனுமரை தடுத்து நிறுத்தினார். கால பைரவரின் கட்டுபாட்டில் தான் காசி இருக்கிறது. அவர் தான் காவல் புரிகின்றார்.
தன் அனுமதியின்றி லிங்கத்தை எடுத்த குற்றத்தினால் கடும் கோபம் கொண்டார். இருவருக்கும் போர் மூண்டது. கால பைரவரும் ஹனுமாரும் போரிட்டு கொண்டனர். இதனை அறிந்த தேவர்கள் அங்கு வந்து காலபைரவரை வணங்கி வேண்டி நின்று இந்த லிங்கம் உலகத்தின் நன்மைக்காக ராமேஸ்வரம் செல்கிறது. தயவு கூர்ந்து அனுமதியுங்கள் என்று கேட்டு கொண்டனர். கோபம் தணிந்த பைரவர் அனுமதி அளித்தார்.
ஆனால் இதற்கு காரணமாக இருந்த அந்த கருடன் மற்றும் பல்லியை சாபமிட்டு விட்டார். இனி காசியில் எங்கும் கருடனாகிய நீர் பறக்க முடியாது என்றும், பல்லியாகிய நீர் சப்தமிட முடியாது கடவது என்று கூறிவிட்டார். இதன் காரணமாக இன்றளவிலும் கூட காசியில் கருடன் பறப்பதில்லை. பல்லியும் சப்தமிடுவது இல்லை.
இது போன்ற வரலாற்று அதிசய நிகழ்வுகள் இன்றும் தொடர்வதால் தான் இன்னுமும் கடவுளின் மேல் உள்ள நம்பிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.