பள்ளிக் குழந்தைகளின் இஷ்ட தெய்வம் மூக்கறுந்த விநாயகர்..! எங்கு இருக்கிறார் தெரியுமா?

பெரிய அளவில் ஆகமம், சாஸ்திரம் ஏதுமின்றி எளியவர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கும் விநாயகர் பல இடங்களில் வினோதமான காரணப்பெயர் கொண்டு விளங்குகிறார்.


அவர்களுள் ஒருவர் திருவானைக்காவலில் கோயில் கொண்டுள்ள மூக்கறுந்த விநாயகர். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஒரு சமயம் உக்கிரமாக இருந்தார். அப்போது ஆதிசங்கரர் அம்மையை அமைதிப்படுத்த ஸ்ரீ சக்கரம் பொறித்த தாடங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அதோடு தாயின் எதிரே மகன் இருந்தால் உக்கிரம் குறைந்துவிடும் என்று கருதிய ஆதிசங்கரர் அம்மன் பார்வைக்கு நேர் எதிரே அந்த உயரத்திற்கு ஏற்றாற்போல் கொடிமரத்தின் பின்னால் ஒரு பிரம்மாண்டமான விநாயகர் சிலையையும் ஸ்தாபித்தார்.

காலப்போக்கில் அந்நியர் படையெடுப்பின் காரணமாக ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் அதை அப்புறப்படுத்தி விட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னமான் சிலை ஆகம விதிகளின்படி கோயில்களில் வழிபாட்டிற்கு உகந்தது அல்ல என்கிற காரணத்தினால் சிலையை இப்போது உள்ள சங்கர மடத்திற்கு அருகில் வைத்தனர். நீண்டகாலமாக சாலை ஓரமாக கிடந்தது பின்னமான விநாயகர் சிலை. அந்த பகுதி மக்களால் மூக்கறுந்த விநாயகர் என்ற காரணப்பெயர் வழக்கத்திற்கு வந்தது. பின்னமான சிலை என்றாலும் அந்த விநாயகருக்கு விளக்கு ஏற்றுவது, கற்பூரம் ஏற்றுவது போன்றவற்றைச் செய்து வந்தனர். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் இஷ்ட தெய்வமானார். மகா பெரியவா சங்கர மடத்துக்கு வரும்போதெல்லாம் இங்கு வந்து மூக்கறுந்த விநாயகர் சிலையின் அருகே அமர்ந்து தியானத்தில் இருப்பாராம்..

நாளடைவில் மூக்கறுந்த விநாயகரிடம் வேண்டிக்கொண்டால் அப்படியே நடந்து விடுகிறது என்கிற செய்தி சுற்றுவட்டாரம் முழுவதும் பரவ, பக்தர்கள் வருகை அதிகரிக்க ஆரம்பித்தது. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வாழைப் பழ மாலை அணிவித்து பொங்கல் படைத்து அப்பகுதி மக்களுக்கு வினியோகிப்பது என ஒரு கோயிலுக்கு உரிய அத்தனை அம்சங்களையும் செய்த போது, பின்னமான சிலைக்கு வழிபாடுகள் செய்யக்கூடாது என யாரோ சொல்ல அப்போது சங்கர மடத்துக்கு வந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி முறையிட்டனர்.

அவரும் பின்னமில்லாத ஒரு சிறு விநாயகரை இந்த விநாயகருக்கு முன்பாக பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யுங்கள். அபிஷேகம், அராதனை நைவேத்தியம் எல்லாம் புதிய விநாயகருக்கு செய்வது போலவே முந்தைய விநாயகருக்கும் செய்ய வேண்டுமென சுவாமிகள் சொன்னதற்கு இணங்க புதியதொரு விநாயகர் விக்ரகம் செய்து பிரதிஷ்டை செய்து முந்தைய பெயரை மாற்றாமல் வேண்டிக்கொண்ட அனைத்தையும் வெற்றியாக்கித் தரும் இக்கோயிலுக்கு வெற்றி விநாயகர் என பெயரிட்டு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளனர்.

இன்றும் ஒருநாள் கூட வாழைப்பழம் மாலை அணியாமல் இருந்ததில்லை இந்த விநாயகர். கடன் நிவாரணம், வேலை கிடைக்க, திருமணமாக, தேர்வில் தேர்ச்சி பெற, தொலைந்து போனது கிடைக்க என பக்தர்கள் அவரிடம் பல கோரிக்கைகளை வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறுகிறது.

5 அடிக்கு சற்று மேலான சிலை வடிவமைப்பு. வலது காலை மடக்கி இடது பாதம் தெரிவது போல அமர்ந்த நிலை. இரண்டு கைகளா? நான்கு கைகளா என அறிய இயலாத அளவிற்கு சிதைத்து உள்ளனர், துதிக்கை உடைக்கப்பட்டுள்ளது. தங்களின் சிறிய பகுதி மட்டும் வெளியே தெரிகிறது. வலது கரமும் முற்றிலுமாக சேதம் ஆகி உள்ளது. அபிஷேக நேரத்தில் நேரில் பார்க்கும் பொழுது பேரழகாக இருக்கிறார் இந்தப் பிள்ளையார்.

சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.