தமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்.

கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு வேலைவாய்ப்புகள் முழுக்க முழுக்க கன்னடர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. சொந்த மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் கர்நாடக அரசின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது மட்டுமின்றி, பிற மாநிலங்களால் பின்பற்றப்பட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


கர்நாடக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் போது இந்த தகவலை தெரிவித்த அம்மாநில சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி,‘‘ கர்நாடக அரசு வழங்கும் சலுகைகளை பெறும் தனியார் நிறுவனங்களாக இருந்தாலும், பெறாத தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் அவை கன்னடர்களுக்கு மட்டும் தான் சி மற்றும் டி பிரிவு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ஏ மற்றும் பி வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்’’ என்று தெரிவித்தார். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு வேலை தேடி செல்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதே உண்மை.

கர்நாடகத்தில் மட்டும் தான் இந்த நிலைமை என்பது இல்லை. ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75% ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தெலங்கானாவில் தனிச்சட்டம் எதுவும் இல்லை என்றாலும் ஐதராபாத் தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கினால் அரசு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய, மாநில அரசு பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். அத்தகைய சூழலில் தனியார் நிறுவனங்களில் உள்ள அமைப்பு சார்ந்த பணிகளின் மூலமாகவே மக்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையை வழங்க முடியும். ஆனால், தனியார் தொழில் நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்குவதில்லை. 

சென்னை மறைமலை நகரில் ஃபோர்டு மகிழுந்து ஆலை தொடங்கப்பட்ட போது, அதன் வேலைவாய்ப்புகள் அனைத்தும் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 27.11.1998&இல் 10 ஆயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினேன். அப்போதிருந்த திமுக அரசு, பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று, உள்ளூர் மக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றியிருந்தால் தமிழக இளைஞர்கள் அனைவருக்கும் இப்போது கண்ணியமான வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அன்று தொடங்கி இன்று வரை கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆட்சிகள், உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய துரும்பைக் கூட அசைக்கவில்லை.

தென்னிந்தியாவில் கேரளம் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தான் தனியார் நிறுவன வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தமிழக தனியார் வேலைவாய்ப்புகளை மட்டும் அனைவருக்கும் திறந்து விட்டால், தமிழக இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலையில்லாமல் வறுமையில் தான் வாட வேண்டும்.

எனவே, தமிழகத்திலும் தனியார்த்துறை வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தமிழகத்திற்கு தொழில் முதலீடு வராது என்று எழுப்பப்படும் அச்சங்கள் தேவையற்றவை. ஆந்திரத்தில் 75% தனியார் வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்குத் தான் என்று அறிவிக்கப்பட்ட பிறகும், தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் அம்மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழகத்திலுள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டையும், அரசு வேலைகள் முழுவதையும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்குவதற்கு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.