சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி எத்தனை நிமிஷம் வர்றாருன்னு தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் 25 வது படம் என்ற பெருமையை சீதக்காதி பெற்றுள்ளது. ஆனால், அந்தப் படத்தில் விஜய் சேதுபதி குறைந்த நேரமே வருவதாக சலசலப்பு எழுந்துள்ளது.


விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரும் 25வது திரைப்படம் சீதக்காதி. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் இந்தப் படம் வெளியாகிறது. செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்ற தமிழ் சொலவடையை வைத்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப் படு வித்தியாசம். கமல்ஹாசனை விஞ்சும் அளவுக்கு மேக்கப் போட்டு ஸ்டில் வெளியாகவே, இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

விஜய் சேதுபதிக்கு பெரும் புகழ் பெற்றுத்தந்த, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்  படத்தை இயக்கியவர் என்பதால், பாலாஜி தரணிதரன் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்தப் படத்தில் 80 வயது முதியவர் ஆதிமூலம் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் மேக்கப்பும், பாலாஜி தரணிதரன் மீது இருந்த நம்பிக்கையுடனும் படம் பார்க்கச் சென்றால், கிடைப்பதென்னவோ ஏமாற்றம்தான்.

ஏனென்றால் 25 வது படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி மொத்தமே படத்தில் 25 நிமிடங்கள்கூட வரவில்லை. அவர் மட்டுமின்றி, இந்தப் படத்தில் நடித்துள்ள ரம்யா நம்பீசனும் சில நிமிடங்களே வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலுமகேந்திராவின் ஃபேவரிட் நடிகை அர்ச்சனா நடித்திருக்கிறார். ஆனால், படம் பார்ட் பார்ட்டாக வெவ்வேறு தளத்தில் நகர்வதால், இந்தப் படத்தில் யாருக்குமே முக்கியத்துவம் இல்லை.

நாடக நடிகராக நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு நடிப்பைக் கொட்டுவதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும், அதனை பயன்படுத்த முடியாமல் இயக்குனருக்கு என்ன நெருக்கடி என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் கதையை வெளியே சொல்லக்கூடாது என்று இயக்குனர் கெஞ்சிக்கெஞ்சி கேட்டுக்கொண்டதால், விமர்சனம் வெளிவரும் வரையில், இந்தப் படத்தின் கதையை சொல்வதைத் தவிர்க்கிறோம். ஆனால், ரசிகர்களுக்கு செமத்தியான ஏமாற்றம் காத்திருக்கிறது என்பதை மட்டும் முன்னோட்டமாக சொல்லிக்கொள்கிறோம்

இந்தப் படம் பற்றி விஜய் சேதுபதி நெஞ்சுருக பேசியிருந்தது இந்த நேரத்தில் தேவையில்லாமல் நினைவுக்கு வருகிறது. அதாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்பின் இமயம் கமல்ஹாசன் ஆகியோரில் ஒருவர் நடிக்க வேண்டிய படம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இது ஆத்மார்த்தமான படம். இந்தப் படத்தில் நடித்ததற்கு பெருமைபப்டுகிறேன்.காலத்தைத் தாண்டியும் பேசப்படும் என்றெல்லாம் புளகாங்கிதப் பட்டிருந்தால் விஜய்சேதுபதி.

ஆனால், படத்தைப் பார்க்கும்போது அப்படித் தெரியவில்லை. ஏன் இந்தப் படத்துக்கு வீணாக பில்டப் கொடுத்தாரோ. ஆனால், அவர் அப்படிப் பேசியதால்தானோ என்னவோ, விஜய் டி.வி. இந்தப் படத்தை வாங்கிவிட்டது. தமிழகம் முழுவதும் 20ம் தேதி ஏராளமான தியேட்டர்களில் வெளியிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்வமாகவும் இருக்கிறார்கள்.

விஜய் சேதுபதியை நம்பாமப் போனா, கொஞ்சமா ரசிக்கலாம். நம்பிப் போனா வைச்சி செஞ்சுடுவார். அதனால, சொல்லவேண்டியதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க ரிஸ்க்.