உங்களுக்கு சந்திர திசை எப்படியிருக்கு? தண்ணீர் ஜாக்கிரதை!

ஒரு ஜாதகத்தில் பலன்களை அறிந்துக்கொள்ள, பலவகைகளில் சாஸ்திரம் நமக்கு பல கணக்குகளை தந்துள்ளது.


அதன்படி ராசி என்பது ஒருவர் பிறந்த நட்சத்திரத்தின் பாதம் எந்த ராசியில் இருக்கிறதோ அதுதான் ஒருவரின் ஜென்ம ராசியாகும். இதை தீர்மானிக்கும் கிரகம் சந்திரன். சந்திரன் என்ற தினக்கோள், 12 ராசி கட்டங்கள், 27 நட்சத்திரங்கள், 108 பாதங்களை வளர்பிறை, தேய்பிறை என்ற திதி கணக்கில் சுமார் ஒரு மாதத்தில் ராசி மண்டலத்தை அதிவேகமாக பயணித்து கடந்து செல்கிறது.

இந்த சுழற்சி முறையில்தான் காலச்சக்கரம் சுழல்கிறது. இப்படி அதிவேகமாக பயணிப்பதால் சந்திரனுக்கு பயணக் கிரகம் என்ற பெயர் ஏற்பட்டது. ஜாதக ரீதியாக ஒருவருக்கு சந்திர திசாபுத்தி நடைபெறும் காலத்தில் பல்வேறு விநோதமான பலன்களை தருகிறார். ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடங்கள் நடக்கும். சந்திரபகவான் மனோகாரகன் என்று அழைக்கப்படுவார்.

பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் நல்ல மனவலிமை, தைரியம், துணிவு உண்டாகும். சந்திரனின் திசை ஒருவருக்கு எப்படி இருக்கும்?.. என்று பார்த்தால் சந்திரன் கேந்திர திரிகோணத்தில் அமையப்பெற்று திசை நடத்தினால் சமுதாயத்தில் பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவ பதவிகள் வரும் சூழ்நிலை என்று பல்வேறு நற்பலன்கள் உண்டாகும்.

சந்திரன் நீசம் பெற்றோ, பகை பெற்றோ அமையப்பெற்று திசை நடைபெற்றாலும், சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படும் ராகு-கேது சேர்க்கை பெற்று, திசை நடந்தாலும் தண்ணீர் தொடர்பான நோய்கள், பொருளாதார நெருக்கடி, மனக்குழப்பம், தைரியம் இல்லாத நிலை உண்டாகும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர திசை பிறக்கும்போதே நடக்கும். பொதுவாக சந்திர திசை பிறக்கும்போது நடைபெற்று சந்திரன் மற்றும் 4ம் பாவம் பாதிக்கப்பட்டு இருந்தால் தாய்க்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். சந்திரபகவானின் திசையானது சில லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலப் பலனை அதிகம் தரும்.

குறிப்பாக சந்திரனுக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாயின் லக்னமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் அதிபதி என்பதால் அனுகூலத்தை உண்டாக்குவார். ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் அதிபதி என்பதால் சந்திரன் அமையும் இடத்தைப் பொறுத்து சாதகமான பலனை உண்டாக்குவார். மிதுனத்திற்கு 2ம் அதிபதி என்பதால் ஓரளவுக்கு சாதகமான பலனை தருவார் சந்திரன்.

கடக லக்னத்திற்கு சந்திரன் லக்னாதிபதி என்பதால் சந்திர திசை மிகவும் சாதகமான பலனை உண்டாக்கும். சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்னாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திர திசையில் அடையலாம். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இலாபாதிபதி சந்திரன் என்பதால் சந்திர திசை சாதகமான பலன்களையே தரும்.

துலாம் லக்னத்திற்கு 10ம் அதிபதி சந்திரன் என்பதால், சந்திர திசை நடைபெறும்போது தொழில் ரீதியாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் 9ம் அதிபதி என்பதால் அனுகூலப்பலனை தரமாட்டார். சந்திரன், தனுசு லக்னத்திற்கு 8ம் அதிபதி என்பதால் சாதகமாக அமையப் பெற்றால் மட்டுமே நற்பலனை கொடுப்பார்.

மகர லக்னத்திற்கு சந்திரன் 7ம் அதிபதி என்பதால் ஏற்றத்தாழ்வினை தருவார். கும்ப லக்னத்திற்கு சந்திரன் 6ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும்போது மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். மீன லக்னத்திற்கு சந்திரன் 5ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் காலத்தில் மிகவும் சாதகமான பலன்கள் உண்டாகும்.