மண்பிடித்திருவிழா மகிமை தெரியுமா? வாழ்க்கையை மாற்றும் அற்புதம்!

நரசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவார கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்பிடித்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம்.


மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த நரசிங்கம்பட்டியில் விவசாயம் செழிக்க ஒவ்வொரு கைப்பிடி மண்ணை எடுத்து பக்தர்கள் போட, அது மலையாக வளர்ந்து உள்ளது.

இதை ஒரு விழாவாகவே அந்த கிராம மக்கள் நடத்துகின்றனர். கார்த்திகை தீப திருநாள் அன்று மேலூர் பகுதியில் நடக்கும் விநோத வழிபாடுகளில் இதுவும் ஒன்று. மேலூர் நரசிங்கம்பட்டியில் உள்ளது பெருமாள்மலை. இங்குள்ள முன்னமலையில் ஆண்டிச்சாமி கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் கார்த்திகை தீப திருநாள் அன்று அப்பகுதியில் ஓடும் சேங்கை ஓடையில் இருந்து கைப்பிடி மண்ணை எடுத்து விவசாயம் செழிக்க வேண்டும்,

என் வாழ்வு மலைபோல் உயர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கோயில் அருகில் போட்டு இறைவனை வழிபாடு செய்வார்கள். இத்துடன் மிளகு, உப்பு ஆகியவற்றையும் அந்த மண்ணில் போடுவார்கள். இப்படி மண்ணை எடுத்து போட்டால் விவசாயம் செழிக்கும், வாழ்வு உயரும்.

மிளகும் உப்பும் போடுவதால் நோய் நொடியின்றி வாழலாம் என்பதும் நரசிங்கம்பட்டி கிராம மக்கள் மட்டுமன்றி அக்கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கை.

பக்தர்களால் கைப்பிடி கைப்பிடியாக போடப்பட்ட மண் அந்த இடத்தில் தற்போது ஒரு மணற்குன்றாக மாறிவிட்டது. அந்த மணற்குன்றின் மீது இரவில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மண்ணை ஒரு குறிப்பிட்ட இடத்தில் எடுப்பதால் அந்த இடம் பள்ளமாகி தண்ணீர் தேக்குவதற்கு பயன்படுகிறதாம்.