நரசிம்ம மூர்த்தியின் ஒன்பது திருவடிவ தரிசனம்! ஒரே இடத்தில் காணலாம் வாருங்கள்!

பிரகலாதனைப் போன்ற ஆழ்ந்த, மெய்யான பக்தியுடனும், மிகுந்த நம்பிக்கையுடனும் வழிபடுவர்களின் கோரிக்கைகளை நரசிம்மர் புறக்கணித்ததோ காலம் தாழ்த்தியதோ இல்லை.


தம்மிடம் யார் வந்து எதைக் கேட்டாலும் அதைக் கேட்டபடியே கொடுக்கும் குணம் கொண்டவர் நரசிம்மர். தன் பக்தன் மீது நரசிம்மருக்கு அவ்வளவு பிரியம். அவ்வளவு மகிமை மிக்க நரசிம்ம மூர்த்தி ஒன்பது திருவடிவங்களில் திருவருள்புரியும் ஆலயம் சென்னை நாவலூர் அருகே தாழம்பூர் மெய்ன் ரோடில் அமைந்துள்ளது. அந்த மூர்த்திகளைப் பற்றி அறிவோம்.

1. ஸ்ரீதேவி பூதேவி சமேத சூர்ய நாராயணப் பெருமாள்.

மேல் வலது கரம் சக்கரத்தையும், மேல் இடது கரம் சங்கையும் ஏந்தி, கீழ் வலக்கரம் கேட்கக்கூடிய வரங்களை அருளும் அபய முத்திரையைத் தரித்து இடது கையை கம்பீரமாக தன் தொடைமீது இருத்தி வலதுகாலை தொங்கவிட்டு இடதுகாலை மடித்த திருக்கோலம். சூரிய மண்டலத்தின் மத்தியிலுள்ள நாராயணனைப் போன்ற திருக்கோலம்.

ஜாதகத்தில் சூரிய தோஷம், நீசமடைந்தவர்கள் இவரை வழிபட அந்த தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் சுயநிலை, சுய உயர்வு, செல்வாக்கு, சொல்வாக்கும் உயரும். பரிகாரம்: இலுப்பை எண்ணெய், நெய் இரண்டையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

2. மதி நாராயணப் பெருமாள்.

இடது கரம் சிருஷ்டி முத்திரை தரிக்க வலது கரம் வரமுத்திரை தரித்த திருக்கோலம். நாம் சாதகமான, பாதகமான எண்ணங்களை எண்ணுவோம். அந்த இரண்டில் எது நமக்கு சாதகமோ அதை தனது இடது கரத்தால் சிருஷ்டித்து தன் வலது கரத்தால் அருள்பவர். மேலும் பிணிகளிலிருந்து நிவாரணம் பெறலாம். பரிகாரம்: வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் கலந்து விளக்கேற்ற வேன்டும்.

3. வீர நாராயணப் பெருமாள்.

தன் மேலிரு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, கீழ் இடது கை அபயம், கீழ் வலது கையை தன் தொடையில் இருத்தி இடதுகாலை தரையில் ஊன்றிய திருக்கோலம். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருளும் விசேஷமான பெருமாள். இவரை வழிபட வழக்கு விவகாரங்களிலிருந்து விடுபடலாம். இவரை சரணடைய அபயம் தந்து காப்பவர். மேலும் பூமி லாபம் கிட்ட அருள்பவர். கோபம் குறையும்.  பரிகாரம் : நல்ல எண்ணெய், வேப்ப எண்ணெய், நெய் கலந்து விளக்கேற்றவும்.

4. பிரஹஸ்பதி நாராயணப் பெருமாள்.

இவர் பிரகலாதனுக்கு அனைத்தையும் போதித்தருளிய நரசிம்மர். மேற்கரங்களை சங்கு, சக்கரங்கள் தாங்க கீழ்க்கரங்களை புத்தகம், வரதம் தாங்கியுள்ள திருக்கோலம். மாணவ மாணவியர் இவரை வணங்க கல்வியறிவு மேம்படும்.வெளிநாடுகளில் இருந்தாலும் இவரை மனதாற மாதா,பிதா என நினைத்து வழிபடுபவர்களின் காரியானுகூலம் செய்யும் பெருமாள். மேலு, பித்ரு தோஷத்தை நீக்கி மென்மேலும் சுபகாரியங்கள் நடைபெற அருள்பவர். பரிகாரம்: நெய் விளக்கேற்றவும்.

5. தேவநாராயணப் பெருமாள்.

பட்சிராஜனான கருடாழ்வாருக்கு காட்சி தந்த விசேஷ திருக்கோலம். இவரிடம் சரணாகதியடைய அனைத்து பாவங்களையும் நீக்கியருள்வதாக ஐதீகம். மேலும், சகல செளபாக்யங்களும் கிட்டும், மன அமைதி கிட்டும். பரிகாரம்: நல்லெண்ணெய், நெய் கலந்து விளக்கேற்றவும்.

6. சர்வ நாராயணப் பெருமாள்.

வேதத்துக்கு அதிபதி நரசிம்மர்.படுத்த நிலையில் அருளும் ரங்கநாதர் ,அனந்த பத்மநாபர் போன்றோரை வணங்கினால் அவர்கள் எதிரில் வணங்கும் அடியார்களை ஆசிர்வதிப்பதாக ஐதீகம். இவர் ஆதிசேஷன் மேல் சயனித்த திருக்கோலம். திருவடிகளின் கீழ் மகாலட்சுமி தாயார். இங்கு வேதத்திற்கு அதிபதியான சயன நரசிம்மர் தன்னை வணங்கும் குடும்பத்தில் உள்ள யாவரையும் தீர்க்கசுமங்கலி பவ,

தீர்க்காயுஷ்மான்பவ என ஆசிர்வதிப்பதாக ஐதீகம். பெருமாளின் திருவடியின் அருகே மகாலட்சுமி தாயார் கைங்கரியம் செய்வதால் இத்தாயாரை வணங்க அதிகவரங்கள் பெறலாம். குறிப்பாக திருமணத்தடை உள்ளவர்கள் 5வெள்ளிக்கிழமைகள் இத்தாயாருக்கு 3 முழம் விரலிமஞ்சள் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வேண்ட தடைபட்ட திருமணம் தடைநீங்கி நடக்கிறது. பரிகாரம்: நல்லெண்ணெய், நெய் கலந்து விளக்கேற்றவும்.

7. ஞான நாராயணப் பெருமாள் (எ) ராம நரசிம்மர்.

சீதை, அனுமனுடன் பட்டாபிஷேக திருக்கோலம். இந்த பெருமாள் சங்கு, சக்கரம், வில், அம்பு ஏந்தி வலதுகாலை தாமரைமீது பதித்து இடது காலை மடித்த திருக்கோலம். இவரை வழிபட சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள், உபத்திரவங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் எதிலும் வெற்றியும், சுகவாழ்வும் கிட்டும். பரிகாரம்: நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் கலந்து விளக்கேற்றவும்.

8. க்ரோத நாராயணன் எனும் சக்ர நரசிம்மர்.

நான்கு திருக்கரங்களிலும் சக்கரம் ஏந்தி ஆதிசேஷன் மேல் வீற்றிருக்கும் திருக்கோலம். இவருக்கு பானகம் நிவேதித்து வழிபட ஜாதகத்திலுள்ள அத்தனை தோஷங்களும், தடைகளும் தவிடுபொடியாகும். பரிகாரம்: இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் கலந்து விளக்கேற்றவும்.

9. திவ்ய நாராயணர் எனும் வேங்கடவாண நரசிம்மர்.

நின்ற திருக்கோலம். சங்கு, சக்கரம் ஏந்தி வரதம், அபயம் தரித்த திருக்கோலம். திருவடிகளில் குபேரன், மகாலட்சுமி, சுக்கிரன் மூவரும் ஐக்கியம். எனவே, இவரை தரிசிக்க இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம் என்பதும் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.  பரிகாரம்: வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் கலந்து விளக்கேற்றவும்.

மட்டைத் தேங்காய் வழிபாடு. நாம் நினைத்த காரியத்தை மனதில் நினைத்து அர்ச்சனை செய்து சந்நதியில் கட்டவேண்டும். எந்த காரியத்தை நினைத்து தேங்காய் கட்டுகிறோமோ அந்த நரசிம்மருக்கு குறிப்பிட்ட எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும். மேலும் இத்தல ராஜகோபுர அமைப்பினுள் கண்ணாடியறை அற்புத வடிவில் அமைந்துள்ளது. அதில் உற்சவ பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி போன்றோர் அருள்கின்றனர்.