மரண பயம் நீக்கும் கால பைரவர்! இந்த கோயிலில் கால பைரவரை வழிபாடு செய்தால் அச்சம் நீங்கி மென்மை பெறலாம்!

மனிதப் பிறவியை மரணம் குறித்த அச்சம் என்பது பொதுவானது.


மனிதன் தன்னை அறியாத நிலையில் இருக்கும் வரை அவனுக்கு மரண பயம் தொடரும். தன்னை அறிந்து கொள்ளும் பொழுது அந்த அச்சத்தில் இருந்து முற்றிலும் வெளியேறுகிறான். தன்னைத்தானே உணரச் செய்யும் ஆசான் காலபைரவர். அவர்தான் பயத்தை போக்கும் கடவுள். மனித பிறவியின் மரண பயத்தை போக்கி பயமில்லா மரணத்தை மோட்சமாகத் தரக்கூடியவர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ மஹா பைரவர். இக்கோவிலிலை நிர்மாணித்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் இத்திருத்தல மகிமையைப் பற்றி கூறியுள்ளார். பைரவரின் கணக்கெல்லாம் எட்டின் மடங்கில் அமைந்திருக்கிறது.

பைரவர் சுவாமியின் அவதாரங்கள் வளர்ந்து 64ஐ தொட்டு ஆய கலைகளின் அரசனாக அவதாரம் பெற்றுள்ளார். அவதாரங்களில் காலபைரவர் முதன்மையானவர். சிவபெருமானின் அம்சமான ஸ்ரீ பைரவரின் அருளாற்றலை இந்த உலகம் உணர வேண்டும் என்பதற்காக தொடங்கியதே இந்த ஸ்ரீ மகா பைரவ ருத்ர ஆலயம்.

நாகர்கோவில் அருகே மிக எளிய குடும்பத்தில் பிறந்து வர்த்தகராக இருந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளுக்கு அவரது ஊருக்கு அருகே இருக்கும் ஒரு பைரவர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்யும் பாக்கியம் கிடைத்தது. அச்சமயத்தில் இந்த சுவாமிகளை ஆட்கொண்டார் ஸ்ரீபைரவர். பின்னர் இந்த சுவாமிகளை வழிநடத்தி இந்தத் திருக்கோவில் உருவாக வழிவகை செய்து இங்கிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ என்பது பெண் சக்தியை குறிக்கும். மகா என்றால் பெரியது என்று பொருள். பைரவ என்றால் பயம் அறியாதவர் என்று அர்த்தம். ருத்ர என்பது சிவ வம்சத்தையும், ஆலயம் என்பது ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டதலம் என்பதை யும் குறிக்கும். மொத்தத்தில் பயம் அறியாத சக்தியுடன் கூடிய சிவ அம்சத்து ஆகம விதிப்படி அமைந்த ஆலயம் என்று பொருளாகும்.

வெள்ளை மாளிகையாக சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அருள் பொழிந்து கொண்டிருக்கிறது பைரவரின் திருக்கோயில். இங்கு அருள் நாயகனாக ஸ்ரீமகா பைரவர் நாய் வாகனத்தில் வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்துக்கு செல்ல 12 படிகள் ஏற வேண்டும். அந்த பன்னிரண்டு படிகளில் 12 ராசிகளுக்கு அதிபதியாகவும் வீற்றிருக்கிறார். அந்தந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு உரிய ராசிப் படியில் நின்று பூஜை செய்து ஸ்ரீ மஹா பைரவரை வழிபடும் பொழுது அவர்களின் குறைகள் தீர்ந்து வேண்டுதல் நிறைவேறுகிறது.

ஸ்ரீ மஹா பைரவர் வளாகத்திலேயே எழில்மிகு தோற்றத்தில் அறிவின் ஒளியை அருளாகப் பாய்ச்சி நிற்கிறார் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி எனும் குருபகவான். இங்கு பூமாதேவிக்கும் தனிக்கோயில் உண்டு. கிருஷ்ணர், குபேரர், ஸ்ரீவைஷ்ணவி தேவி ஆகிய தெய்வங்களும் இங்கு தரிசனம் தருகின்றனர். ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரும் உண்டு. பித்ருக்களின் தோஷம் நீங்க பரிகாரங்கள் மேற்கொள்ள பரிகார மண்டபமும் இங்கு அமைந்துள்ளது.

குகை வடிவில் பூமிக்குக் கீழே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஓம் வடிவில் ஓங்காரமாக காட்சி தருகிறது தியான மண்டபம். குறிப்பிட்ட நாட்கள் விரதம் பூண்டு உடல், மனம் தூய்மை பெற்று இந்த குகைக் கோவிலில் குறிப்பிட்ட நேரத்தில் அமர்ந்து தியானித்தால் பலன் கிடைக்கும். ஸ்ரீ மஹா பைரவரின் ஆலயம் விசேஷ தினங்களில் அதிகாலை 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

தவிர சித்திரா பௌர்ணமி இங்கு விசேஷம் ஆகும். அன்று படி பூஜை மிக சிறப்பாக நடைபெறும். பைரவர் பிறப்பு தினம், பைரவர் அஷ்டமி, தேய்பிறை ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நீல நிற உடை இங்கு பக்தர்களால் பின்பற்றப்படுகிறது. பிரார்த்தனைகள் நிறைவேற இக்கோவிலில் அரிசி கொடுக்கும் அனுபவம் விசேஷமாகும். விரதமிருந்து அரிசி கொடுத்து பிரார்த்தனை நிறைவேற வில்லை எனில் ஸ்ரீபைரவ சித்தாந்த சுவாமிகள் அதற்கான காரணத்தை விவரித்து வழிகாட்டுகிறார்.

இத்தகைய சிறப்புடைய இத்தலத்துக்கு மேலும் மெருகு ஏற்றும் வகையில் தற்போது ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. குபேர செல்வத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்த சன்னதி உள்ளது. அங்கு குபேர குடமும், அஷ்ட லட்சுமிகளும் உள்ளனர். எனவே அங்கு வழிபட்டால் செல்வம் பெருக்கெடுத்து வரும் என்ற ஐதீகத்தின்படி அந்த சன்னதி அமைந்துள்ளது. அது போல ஸ்ரீகனகதுர்க்கை, ஸ்ரீசரஸ்வதி தேவி, ஸ்ரீபைரவர் பாதரட்சை மண்டபம், ஸ்ரீமகாநந்தி ஆகியவையும் தனித் தனி சன்னதியாக அமைத்துள்ளனர்.