ஆச்சிராமவல்லி அம்மன்! இந்தப் பெயருக்குப் பின்னே இருக்கும் அதிசய ரகசியம் தெரியுமா?

தெய்வ வழிபாட்டில் சப்த கன்னியருக்கு சிலாரூபம் அமைக்கப்பட்டிருக்கும்.


பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய இந்த எழுவரில், ஒவ்வொரு ஊருக்கும் கிராம தேவதையாக அதில் ஏதேனும் ஒரு தெய்வத்திற்கு கோவில் அமைந்திருக்கும். அவர்கள் வெவ்வேறு திருநாமம் கொண்டிருப்பார்கள்.

நாட்டில் பல்வேறு பெயர்களில் அமைந்திருக்கும் சிறுதெய்வக் கோவில்களில் மூலவராக இவர்களே தொன்றுதொட்டு வழிபாட்டில் இருந்து வருகிறார்கள். அப்படியான ஒரு கோயில்தான் திருச்சியில் அன்பிலுக்கு அருகில் பனைமரக்காட்டிற்குள் அமைந்துள்ள ஆச்சிராமவல்லி அம்மன் ஆலயம்.

ஆச்சிராமவல்லி என்னும் பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. திருச்சியிலிருந்து சேலம் செல்லும் சாலையில் திருவாசி என்னும் ஊர் இருக்கிறது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இவ்வூர் பாச்சில் கூற்றத்திற்கு உட்பட்டது. பாச்சிலில் இருக்கும் சிவாலயம் ஆச்சிராமம் எனப் பெயர் பெற்றது. இந்த ஊரில்தான் முன்பு ஆச்சிராமவல்லி என்னும் தாய் தெய்வ வழிபாடு இருந்துள்ளது. அய்யன் வாய்க்கால் கரையில் இக்கோயில் சிறிய அளவில் இப்போதும் இருக்கிறது.

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆச்சிராமவல்லியின் சிலாரூமம் தற்போது கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் கொள்ளிடக் கரையில் ஒதுங்கியது. அச்சிலையை எடுத்த ஊர் மக்கள் நம் ஊரைக் காக்க வந்த தெய்வம் என மிகவும் மகிழ்ந்து ஏற்கனவே இருந்த ஓலைபிடாரி, ஊமைப்பிடாரி, செவிட்டுப்பிடாரி ஆகிய கிராம தேவதைகளுடன் இந்த சிலையையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் அம்மனின் உத்தரவுப்படி தனிக்கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.

இங்கு ஆச்சிராமவல்லிக்கு தனிக் கோயில் எழுப்பியதன் பின்னணியில் வணிகர்களின் பங்களிப்பு இருக்கிறது. ஒரு சமயம் இந்த வழியாக மாட்டு வண்டியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்ற வியாபாரிகள் ஆச்சிராமவல்லி கோயில் அமைந்திருந்த பனந்தோப்பில் மாடுகளை அவிழ்த்து இளைப்பாறினார்கள்.

அப்போது ஆச்சிராமவல்லி அம்மன் சிறு பெண் போல் வந்து வண்டியில் என்ன பொருட்கள் உள்ளன என்று கேட்க, வியாபாரிகளோ மூட்டைகளில் எல்லாம் தவிடுதான் இருக்கிறது என்று பொய் கூறினர்/ பின்னர் அங்கிருந்து கிளம்பிய வணிகர்கள் கும்பகோணம் சந்தைக்குச் சென்று வண்டியிலிருந்த மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்த பொழுது உண்மையில் எல்லாமே தவிடாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் சிறுமி உருவில் வந்தவள் ஆச்சிராமவல்லியே என்பதை உணர்ந்து தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கேட்டு ஓலைக் கொட்டகையில் இருந்த ஆச்சிராமவல்லி அம்மனுக்குக் கற்கோயிலை எழுப்பினர்.

வடக்கு நோக்கிய கருவறையில் சப்த கன்னியரை மூலவராக எழுந்தருளி உள்ளனர். அதில் நான்காவதாக விளங்கும் வைஷ்ணவியே ஆச்சிராமவல்லி என்னும் திருப்பெயரில் பிரதான தெய்வமாக விளங்குகிறாள்.

கோவிலுக்கு இடதுபுறம் நம்பியப்பர் ஆலயம் இருக்கிறது. நம்பியப்பர் என்று வழிபடப்படும் இக்கிராம தெய்வம் ஒரு நவகண்டச் சிற்பம். நேர்த்திக்கடன் வேண்டுதல்கள், உறவுகளுக்காக, மன்னனுக்காக, போர் வெற்றிக்காக, எதிர்ப்பை காட்ட எனப் பல்வேறு காரணங்களுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் அந்தந்த ஊர் மக்களால் காவல் தெய்வமாக வழிபடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நம்பியப்பர் என்னும் திருப்பெயரோடு தனிக்கோயில் கொண்டு இன்றளவும் சிறந்த வழிபாட்டிடமாக இது இருக்கிறது. செவிவழிக் கதைகள் மூலம் இவர் காஞ்சிபுரத்தில் இருந்து வந்த வைணவ மரபினர் என்று தெரியவருகிறது.