மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் புதுதில்லியில் திரண்டு போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பொதுமக்களும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கண்டன குரலெழுப்பி வரும் நிலையில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியவர்களை சிறையில் அடைப்பதா..? கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் கடலூர் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், விவசாயிகள் அமைப்பைச் சார்ந்தவர்களையும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வழியிலேயே தடுத்து கீழே தள்ளியுள்ளனர்.
காவலர்களின் முரட்டுத்தனத்தால் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அங்கும் அராஜகமான முறையில் மிரட்டியுள்ளனர். இதனை கண்டித்து அனைவரும் மதிய உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.
மேலும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் 12 பேர் மீது பொய் வழக்கு புனைந்ததுடன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ. மாதவன், நகர செயலாளர் ஆர். அமர்நாத், ஒன்றிய செயலாளர் ஜெ. ராஜேஸ்கண்ணன், வாலிபர் சங்க நகரச் செயலாளர் டி.எஸ். தமிழ்மணி, நகர்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன் ஆகிய 6 பேரை கைது செய்து சிதம்பரம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
காவல்துறையின் இத்தகைய ஜனநாயக விரோத, கண்மூடித்தனமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துளார்.