வசந்த பஞ்சமி என்றால் சரஸ்வதி அவதார தினம்..! கலைகள் பெற அன்னையை வணங்குவோம்!

வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும்.


பஞ்சமி என்பது மாதந்தோறும், வளர் பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் வரும் திதி ஆகும். பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி.

தட்சிணாயன காலத்தில், அதாவது ஆவணி மாதத்தில் வளர்பிறை பஞ்சமியில் சூரியன் பயணிப்பார். இதனை கருட பஞ்சமி என்றும், புரட்டாசியில் வரும் வளர்பிறை பஞ்சமிக்கு ரிஷி பஞ்சமி என்றும் பெயர். அதே போல் உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதிக்கு வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது.

வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். வட இந்தியாவில், மக (மாசி) மாதம் (சனவரி - பிப்ரவரி) சுக்ல பட்ச (வளர்பிறை) ஐந்தாம் நாளான (பஞ்சமி) வசந்த பஞ்சமியன்று, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரசுவதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாளை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்படுகிற்து.

இந்த வசந்த பஞ்சமி தினத்தில் தான் பகவான் கிருஷ்ணன், தன் இளம் வயதில் சாந்தீபனி முனிவரிடம் கல்வியை கற்றுக் கொள்ள குருகுல வாசம் தொடங்கிய மிகச்சிறப்பு வாய்ந்த நாளாகும். உலகைக் காக்கும் பணியை மேற்கொள்ளும் மும்மூர்த்திகளில் ஒருவரான பகவான் கிருஷ்ணர் எல்லா மாணவர்களைப் போல குருகுல வாசம் சென்று கல்வி கற்ற முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

தென் மாநிலங்களில் விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி கற்க சொல்லித் தருகிறோமோ, அதேபோல், வட மாநிலங்களில் இந்த வசந்த பஞ்சமி நாளில் தான் குழந்தைகளின் கல்வி கற்கும் பருவம் தொடங்குகிறது. வசந்த பஞ்சமி நாளில் கல்வியை தொடங்கும் குழந்தைகளின் முன்பாக, பேனா, பென்சில் மற்றும் சில தொழிற் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து, அவற்றில் ஏதாவது ஒரு பொருளை எடுக்கச் சொல்வார்கள். குழந்தை எடுக்கும் பொருளை வைத்து அதன் ஆர்வமும், எதிர்காலமும் இருக்கும் என்பது நம்பிக்கை.

பிரம்மாவின் மனதில் இருந்து சரஸ்வதி தேவி அவதரித்த நாள் இந்த தை மாத வசந்த பஞ்சமி நாள் ஆகும். இதனால் தான், வட மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வணங்கி பிரார்த்திக்கின்றனர். அன்றைய நாளில், சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர். சரஸ்வதி தேவிக்கு படைக்கும் படையல் வகைகளும் மஞ்சள் நிறத்திலேயே தயாரிக்கப்படும். அதோடு சரஸ்வதி பூஜையில் பங்கேற்கும் பெண்களும் மஞ்சள் நிற ஆடைகளையே உடுத்துகின்றனர்.

பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் வசந்த பஞ்சமி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த பருவத்தில் எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற மலர்களால் பூத்துக் குலுங்கி கண்ணை கவரும். அதற்கு பொருத்தமாக மக்களும் மஞ்சள் நிற ஆடைகளை உடுத்திக் கொண்டு பாங்க்ரா நடனம் ஆடி களிப்பதுண்டு. பள்ளி கல்லூரிகளில், மாணவர்களும் ஆசிரியர்களும் சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வணங்குவார்கள்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வழிபட்டால், அனைத்து வகை கலைகளும் நம் வசப்படும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையலாம், ஞானம் கிடைக்கும். நம் உள்ளத்தில் இருக்கும் அஞ்ஞானம் நீங்கி, ஞான ஒளி தோன்றி வசந்தம் வீசும் என்பது ஐதீகம்.