தீபாவளி என்றாலே செல்வத்தின் அதிதெய்வம் திருமகளின் நினைவும் கூடவே வரும். தீபாவளி நாளன்று நாடெங்கும் லட்சுமி பூஜை மேற்கொள்ளப்படுகிறது.
ஆந்தையை பார்த்தால் அதிர்ஷ்டமாம்! திருமகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கும் ஆந்தைக்கும் என்ன தொடர்பு தெரியுமா?
இச்சமயத்தில் ஒரு தகவல். அது, திருமகளாம் மகாலட்சுமிக்கும் ஆந்தைக்கும் தொடர்புண்டு என்பதுதான். பலருக்கு வியப்பாக இருக்கும் இந்தத் தகவல், வட இந்திய பக்தர்கள் பலருக்கும் ஏற்கெனவே தெரிந்ததுதான்.
நம் கடவுளர் அனைவருக்குமே வாகனம் இருக்கிறது. சரஸ்வதி-பிரம்மாவின் வாகனம், அன்னப் பறவை; பார்வதி-பரமேஸ்வரனின் வாகனம் ரிஷபம். இதைப்போலவே, லட்சுமி-மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடன் உள்ளது. ஆனால், லட்சுமிக்கென்றே பிரத்யேக வாகனம் ஆந்தை என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை ஆந்தை ஒரு மங்களகரமான பறவை. இங்கே நாம் கருடனை சுபசகுனமாக நினைப்பதுபோல் அங்கே ஆந்தை அவர்களுக்கு சுபசகுனம். வெளியில் எங்காவது கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால் குஷியாகி விடுவார்கள். போகிற காரியம் நல்லதாக முடியும் என்ற நம்பிக்கை.
அதிலும் குறிப்பாக தீபாவளி நாளன்று இரவில் தங்களின் வீட்டு முன்புறமோ அல்லது பின்புறமோ, தோட்டத்திலோ ஆந்தையைப் பார்த்தால் அதை அந்த வருஷம் முழுமைக்குமான அதிர்ஷ்டமாகவே கருதுகிறார்கள். ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே கூடு கட்டி வசிக்கத் தொடங்கி, இரவு பகலாகக் குரல் கொடுத்தாலோ அல்லது அந்தப் பகுதியிலுள்ள ஒரு கோயிலில் இப்படி நிகழ்ந்தாலோ, அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம்.
அந்த வகையில் பீகாரில் தீபாவளிப் பண்டிகையை கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்று மாலைப் பொழுதில் அவர்கள் லட்சுமி பூஜை செய்வது வழக்கம். அதற்கு லஷ்மியின் வாகனமான ஆந்தையை விலை கொடுத்து வாங்கிச் சென்று வீட்டில் வைத்துக் கொள்வார்கள்.
முதல்நாள் வாங்கி சென்று அடுத்த நாள் தீபாவளி பண்டிகையன்று அதிகாலை படுக்கையை விட்டு எழுந்து சென்று நேரே அதன் முகத்தில் விழித்துவிட்டுப் பிறகுதான் எண்ணெய் தேய்த்துக் கொள்வார்கள்.
இதனால் பீகாரில் தீபாவளிக்கு முதல்நாள் ஆந்தை வியாபாரம் களைகட்டும். குறிப்பாக ஹாஜிப்பூர், வைசாலி உள்ளிட்ட இடங்களில் விற்பனை அமோகமாக நடைபெறும். தீபாவளி சமயத்தில் இங்கே ஆந்தை ஒன்றின் விலை ரூபாய் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விலைபோகுமாம். எவ்வளவு விலை ஆனாலும் ஆந்தையை வாங்கிவிடுகிறார்கள்.
தீபாவளியன்று அதிகாலையில் ஆந்தையின் முகத்தில் விழித்தால் அந்த ஆண்டு முழுவதும் பணத்தட்டுப்பாடே இருக்காது என்பதும், வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் என்பதும் பீகார் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.