சகல சௌபாக்கியம் தரும் ஆடிக்கிருத்திகை விரதம் – திருத்தணிக்கு சிறப்பு இரயில்கள் ஏற்பாடு

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம்.


மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது. வரும் 27.7.2019 ஆடிக்கிருத்திகை.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப் பொறிகள். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

சென்னையை அடுத்த திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருத்திகை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கிருத்திகை திருவிழாவுக்கான பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விழாவில் கலந்துகொள்வதற்காக திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சென்னையில் இருந்து திருத்தணிக்கு வருகின்ற 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வகம் அறிவித்துள்ளது.