சுமங்கலிப் பெண்கள் செய்யவேண்டிய வரலஷ்மி விரதம்! கன்னிப் பெண்கள் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

வரும் வெள்ளிக்கிழமை 9.8.2019 வரலஷ்மி விரதம்.


வரலக்ஷ்சுமி விரதம் என்பது சுமங்கலிப் பெண்கள் செய்யும் மிகச் சிறப்பான பூஜையாகும். மகாவிஷ்ணுவின் தேவியான லக்ஷ்மி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலக்ஷ்மி விரதமாகும்.

ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் 3-வது ஆடி வெள்ளியன்றோ அல்லது 4-வது ஆடி வெள்ளி அன்றோ வரும். சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான கணவன் அமையப் பெறுவர்.

வரலஷ்மி பூஜை வரலாறு

பத்ரசிவன் என்ற மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். அவனது மனைவி கரசந்திரிகா. இவர்களது ஒரே மகள் சியாமபாலா திருமணம் முடிந்து சென்ற பிறகு, ஒரே மகளைப் பிரிந்த காரணத்தினால் கரசந்திரிகா துயருற்றாள். கரசந்திரிகாவின் துயர் நீக்க மகாலட்சுமியே வயதான சுமங்கலி வடிவில் சென்றாள். வந்திருப்பது மகாலட்சுமி என்பதை அறியாத கரசந்திரிகா அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாள். மகாலட்சுமி அங்கிருந்து வெளியேறியதால், சுபிட்சம் இழந்த பத்ரசிவன் - கரசந்திரிகா அனைத்து செல்வங்களையும் இழந்தனர். தனது பெற்றோர்களின் வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறையப் பொற்காசுகளை அனுப்பி வைத்தாள். ஆனால், கரசந்திரிகாவின் கை பட்டதும் பொற்காசுகள் கரியாகின. தனது தவற்றை உணர்ந்த கரசந்திரிகா சியாமபாலாவின் ஆலோசனைப்படி வரலட்சுமி விரதம் அனுஷ்டித்தாள். அதன் பலனாக இழந்த செல்வங்கள் அனைத்தையும் மறுபடியும் பெற்றதுடன், வம்சம் தழைக்க ஓர் ஆண்குழந்தையையும் பெற்றாள்.

வரலஷ்மி பூஜை செய்யும் முறை

பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட்டு, வெள்ளை அடிக்க வேண்டும். வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அதை அலங்கரிக்க வேண்டும். மண்டபத்தில் இரு பக்கங்களிலும் வாழைக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் படத்தை வைத்து வழிபடலாம். படத்திற்கு மலர் களால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

ஒரு வாழை இலைபோட்டு அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் ஆகிய வற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தை எடுத்து அதன்மேல் முழுத்தேங்காயை வைக்க வேண்டும். கலசத்தை சுற்றி மஞ்சள் நிறக்கயிற்றை இணைத்துக் கட்ட வேண்டும். தேங்காயின் மேல் குங்குமம் இட வேண்டும். அதை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.

முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். மலர்களால் அன்னையை அர்ச்சித்து, அஷ்ட லட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை இலையின் மீது தூவி பூஜை செய்து தூப தீபங்கள் காட்ட வேண்டும். அன்னம், பாயாசம், பழ வகைகள், நிவேதனம் செய்ய வேண்டும். ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.

பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகா லட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். பின் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்

சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்க்கை வளமாகும்.