பழுத்த சுமங்கலிகள் செய்யவேண்டிய சுவாசினி பூஜை! எப்போது எப்படி செய்யணும் தெரிஞ்சுகோங்க!

நவராத்திரி விரதம் இருந்து ஒன்பது தினங்களும் அம்மனை வழிபடுவோர் மறவாமல் செய்ய வேண்டியது சுகவாழ்வளிக்கும் சுவாசினி பூஜை.


இதை மறந்துவிட்டு சிலர் ஆடம்பரமாகச் செய்யும் விழாவாக நவராத்திரி விரத பூஜையைக் கொண்டாடுகின்றனர்.  நவராத்திரியின் ஒன்பது நாட்களில் 3 மற்றும் 7-ம் நாளில் செய்வதே சுவாசினி பூஜை. 

மாதத்தீட்டு என்ற ஒரு விஷயம் அகன்றுவிட்ட பழுத்த சுமங்கலிதான் சுவாசினி ஆவாள். சுமங்கலிகளை (எந்த வயதானாலும்) வைத்து வழிபடுவது சுமங்கலி பூஜைதானே தவிர சுவாசினி வழிபாடு ஆகாது.  

அந்த சுமங்கலிக்கு எண்ணெய், சீயக்காய் கொடுத்து தலைகுளித்துவிட்டு வரும்போது பட்டுப்புடவை ஒன்றை வாசல் கேட்டிலிருந்து பூஜை அறை வரை விரித்து ஆற்று மணலைப் பரப்பி அதில் அந்தப் பெண்ணை நடந்து வரச் செய்ய வேண்டும்.,  பிறகு கோலம் போட்ட மனை மீது சுவாசினி பெண்ணை அமர செய்ய வேண்டும்.

அவர்களை அம்பிகையாக பாவித்து அர்ச்சனை செய்து நாமவளிகளை சொல்ல வேண்டும். சுவாசினி மனம் குளிரும் வகையில் பூஜைகள் அமைய வேண்டும். அனைத்து வகை பூஜைகளும் முடிந்த பிறகு புடவை, ரவிக்கை மற்றும் தாம்பூலம் ஆகியவற்றை சுவாசினிகளுக்கு தானம் கொடுக்க வேண்டும். பிறகு அந்த சுமங்கலி பெண்ணுக்கு அவளுடைய கணவருடன் சேர்த்து உபசாரங்களைச் செய்து, ஆசி பெறுவதுதான் முறையான சுவாசினி பூஜை.  இவை அனைத்தும் முடிந்த பிறகு சுவாசினிகளுக்கு அன்னமிடவேண்டும்.  

சுவாசினிகளுக்கு அணிவிக்கப்படும் மாலையை திருமணமாகாத பெண்கள் வாங்கி அணிந்து கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அரசர்கள் காலத்தில் சுவாசினி பூஜைகள் மிக விமர்சையாக நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே சுவாசினி பூஜையை மறக்காமல் செய்யுங்கள். சுவாசினியை அர்ச்சனை செய்து வழிபட்டால் லலிதா பரமேஸ்வரிக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று சுவாசினி அர்ச்சனை பிரிதாய நமக என்ற நாமவளி சொல்கிறது.