சத்ய நாராயண பூஜை எவ்வாறு ஏற்பட்டது? அதன் மகிமை என்ன?

அசுரர்கள், தேவர்கள்- யாவராலும் போற்றப்படக் கூடியவர் நாரதர். இரு சாராரும் தங்களது பிரச்னைகளை அவரிடம் சொல்லி, அவை தீர வழியும் கேட்பார்கள்.


இப்படி அனைவருக்கும் நல்வழி காட்டும் நாரதருக்கே ஒரு பிரச்னை. அவர் முகம் வாடியது. ஸ்ரீநாராயணர் முன்னால் சென்று நின்றார் நாரதர். அன்பர் மனம் வாடுவதைச் சற்றும் பொறுக்காத பகவான், ‘‘எப்போதும் நாம சங்கீர்த்தனமும் மகிழ்ச்சியுமாக இருக்கும் உன் முகம், இன்று ஏன் இப்படி வாட்டத்துடன் இருக்கிறது?’’ என்று கேட் டார்.

ஸ்வாமி! பரந்தாமா! சதா சுற்றி அலையும் நான் பூலோகத்துக்கும் சென்றிருந்தேன். அங்கே நான் பார்த்ததை நினைத்தால்... அப்பப்பா! மானிடர்கள் எல்லாம் அவரவர் செயல்களால், மறுபடியும் பிறக்கிறார்கள். அளவில்லாத துயரங்களை அனுபவிக்கிறார்கள். அதைப் பார்த்துதான் என் மனம் வாட்டம் அடைந்தது.

துயரங்களில் மூழ்கிக் கிடக்கும் அவர்களை மீட்டு, மகிழ்ச்சியோடு வாழ வைக்க நினைக்கிறேன். வழி தெரியவில்லை. அதற்காகத் தங்களிடம் வந்திருக்கிறேன். லட்சுமி நாயகா! பக்தர்களைக் காப்பவரே! மக்கள் கடைத்தேற, அதிக கஷ்டம் இல்லாமல் அவர்கள் கடைப் பிடிக்கத் தகுந்த வழி ஒன்றைத் தாங்கள் காட்டியருள வேண்டும்!’’ என் றார்.

நாராயணர் புன்முறுவல் பூத்தார். ‘‘நாரதா, உன் எண்ணம் புரிகிறது. உயர்ந்த சிந்தனையுடன் எம்மை நாடி வந்திருக்கிறாய். ‘நாராயண... நாராயண...’ என்று எமது திருநாமத்தைச் சொல்லி, உலகெங்கும் பிரசித்தி பெற்ற நீ, துயரக் கடலில் மூழ்கும் மக்களுக்காக எம்மிடம் வந்திருக்கிறாய். இரக்கம் நிறைந்தவனே, நீ கேட்டதைப் போல, மக்கள் சந்தோஷமாக வாழ வழி இருக்கிறது. சத்யநாராயண விரதத்தைத் தூய பக்தியோடும் ஊக்கத்தோடும் செய்தால் போதும்.

அவர்கள் எனது பரிபூரணமான அருள் பெறுவார்கள். சகல செல்வங்களையும் அடைவார்கள். பேரன்-பேத்தி, உறவினர்கள் உட்பட குடும்பத்தோடு நல்வாழ்வு வாழ்வார்கள். முடிவில் முக்தி அடைவார்கள். உன் விருப்பம் நிறைவேறும். எனது ஆசியும் அருளும் உனக்கு என்றும் உண்டு!’’ என்று வழிகாட்டினார்.

சத்யராராயண பூஜையை செய்பவர்கள் விஷ்ணு பகவானின் அருளை பூரணமாகப் பெறுவார்கள். ஏழ்மையிலிருந்து விடுபடுவார்கள். தோஷங்கள், பாவங்களிலிருந்து விடுபடுவார்கள். பொய் வழக்கு, வில்லங்கங்களிலிருந்து வெளிவருவார்கள் என்பது ஐதீகம். சத்யநாராயண விரதம் அனுஷ்டிப்பதனால் துன்பங்கள் நீங்கும். இன்பமும் மகிழ்ச்சியும் வளரும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். பெண்கள், சுமங்கலிகளாக இருப்பார்கள். வியாபாரம் மேன்மேலும் பெருகும். கல்வியில் மேன்மை அடையலாம்.