கர்நாடக மாநிலம், ஆனேகுந்திக்கு அருகில் உள்ள துங்கபத்ரா நதிக்கரையில், ‘நவபிருந்தாவனம்’ என்று போற்றப்படும் ஒன்பது மாத்வ ஆச்சார்யர்களின் ஜீவசமாதி அமைந்துள்ளது.
மாத்வ ஆச்சார்யர்களின் ஜீவ சமாதி – இன்றும் கண்ணுத்தெரியாமல் சித்தாந்த புருஷர்கள் வாழும் நவபிருந்தாவன்!

துங்கபத்ரா நதியின் மத்தியில் அமைந்துள்ள எழில் மிகு குட்டித் தீவு இது. மகத்தான சித்திகளையும், மந்திர சக்திகளையும் பெற்ற ஒன்பது மத்வ சித்தாந்த புருஷர்கள் காலத்துக்குப் பின், அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் இந்த பிருந்தாவனங்கள் என்றாலும், இவை அனைத்தும் ஜீவனுடைய அதாவது உயிரோட்டமுள்ள சமாதிக் கோவில்கள் என்பது தான் இவற்றுக்குள்ள பெரும் சிறப்பாக கருதப்படுகிறது. தங்கள் ஆயுட்காலம் முடிந்த பின்பும் மக்களுக்கு அருள்செய விரும்பி, சூட்சும உடலில் தங்கி, இந்த பிருந்தாவனத்தில் இன்றும் அருள்புரிகிறார்கள்.
13, 14 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மத்வாசார்யர், த்வைதம் என்ற கொள்கையை உலகிற்கு அறிவித்தார். தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரை ஓரத்தில், கர்நாடக மாநிலத்தில் பிறந்த ஸ்ரீ மத்வாச்சார்யர், பாரதமெங்கும் யாத்திரை சென்று தனது கொள்கையை பரவச் செய்தார். இவரது வழியைப் பின்பற்றுபவர்கள், மத்வ மதத்தினர் எனப்பட்டனர். இந்த மதத்தைச் சேர்ந்த ஒன்பது துறவிகளின் சமாதிகள் அமைந்திருக்கும் இடம் தான், நவபிருந்தாவனம்.
இந்த நவபிருந்தாவனத்தில், ஸ்ரீபத்மநாப தீர்த்தர், ஸ்ரீகவீந்திர தீர்த்தர், ஸ்ரீவாகீச தீர்த்தர், ஸ்ரீவியாஸராஜ தீர்த்தர், ஸ்ரீரகுவர்ய தீர்த்தர், ஸ்ரீஸ்ரீனிவாச தீர்த்தர், ஸ்ரீராம தீர்த்தர், ஸ்ரீசுதீந்திர தீர்த்தர், ஸ்ரீகோவிந்த உதையரு என ஒன்பது மகான்கள் அருள்புரிகின்றனர். இந்த ஒன்பது ஜீவ பிருந்தாவனங்கள் தவிர, அழகிய ஸ்ரீஆஞ்சனேயரின் சன்னிதி ஒன்றும் இங்கு உள்ளது. இந்த ராமபக்த அனுமன் மிகவும் சக்தி வாந்தவர்.
ஸ்ரீஆஞ்சனேயரின் சன்னிதிக்கு எதிரில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். இந்த ஆஞ்சனேயரை சன்னிதியில் குனிந்து சென்றுதான் வணங்க வேண்டும். மிகவும் விசாலமான திருக்கண்களோடு, வாயில் செந்தூரம் துலங்க, சேவை சாதிக்கிறார். இவர் மிகவும் வரப்ரசாதி என்று பக்தர்கள் கூறுகின்றனர். வழிபட்ட குறுகிய காலத்திலேயே, தீராத வியாதிகளைத் தீர்த்தும், நடக்காத காரியங்களை நடத்திக் காட்டியும் அருள்புரிவதில் வல்லவர். அதற்குத் தேவை உண்மையான பக்தி, தூமையான பணிவு, அன்பு கனிந்த மனம் மட்டுமே.
நவபிருந்தாவன தரிசனம் செய, நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன. பிராரப்த கர்மாக்களின் தீய பலன்கள் நீங்கி நமது கோரிக்கைகள், விருப்பங்கள் நிறைவேறுகின்றன. துளசி செடிகள் வளர்ந்துள்ள இந்த பிருந்தா வனத்துள் உறையும் மகான்கள், அபரிமித சக்தியுடன், சூட்சும உருவில் அருள்பாலிப்பதால், பிருந்தாவனங்களைக் கைகளால் தொடாமல் தரிசனம் செய வேண்டும். மேலும், நம்மால் முடிந்த பிரதட்சிண நமஸ்காரம் செய்யலாம். நவபிருந்தாவனத்தை நேரில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைப்பவர்கள்,
‘பத்மநாபம் ஜெயமுனீம் கவீந்த்ரம் சவாகீசம்
வ்யாஸராஜம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் ததைவ ச
ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம்
நவ பிருந்தாவனம் பஜே!’
எனும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட, மிகுந்த பலன் கிடைக்கும். நேரில் தரிசிக்க முடியாதவர்கள் நவபிருந்தாவனம் படத்தை வணங்கி, மேற்கண்ட ஸ்லோகத்தைக் கூறி வந்தாலும் பலன் கிடைக்கும்.
நவ பிருந்தாவனத்தின் அருகிலேயே சூரிய நாராயணா கோவில், சிந்தாமனி கோவில், ஆனேகுந்தி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ நாகலிங்க கோவில், மதுவானா ஹனுமான் கோவில், விநாயகர் ஆலயம் என சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பல்வேறு ஆன்மீகத் தலங்களால் நிறைந்து காணப்படுகிறது.
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் ம்ருத்திகா பிருந்தாவனமும் இங்கு அமைந்துள்ளது. செல்லும் வழி: பெல்லாரி மாவட்டம், ஹாஸ்பெட் என்ற ஊரிலிருந்து, ஹம்பி வழியாக 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஆனேகுந்தி. இங்கிருந்து படகு மூலம் நவபிருந்தாவனம் செல்லலாம்.