கோயில் வாசலில் அமைக்கப்படும் கோபுரமே மற்ற கோபுரங்களை விட உயரமாக இருக்கும்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என ஏன் போற்றப்படுகிறது தெரியுமா?

இதற்கு ராஜகோபுரம் என்று பெயர். நெடுந்தொலைவிலிருந்து பார்த்தாலே இது கம்பீரமாகத் தெரியும். இதை ஒரு லிங்கமாக எண்ணி வணங்குவதும் உண்டு. இதனை ஸ்தூல லிங்கம் என்பது ஐதீகம். இதையும் தெய்வ உருவமாக எண்ணி வணங்குவது நம் வழக்கம். 'கோபுர தரிசனம் பாப விமோசனம்' என்பது பழமொழி.
கோபுரத்தில் தேவகணஙகள், தெய்வ உருவங்கள், பறவைகள், விலங்குகள், புராண, இதிகாசக்காட்சிகள், மனிதர்கள், தேவியர்கள், மெய்யடியார்கள் எனப் பலவகை சிற்பங்கள் இருக்கும். உலகில் பிரபஞ்ச அமைப்பில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு.சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் எல்லோரும் பிரபஞ்சத்தில் உள்ளனர். அதிலும் இது உண்டு இது எல்லை என்ற பாகுபாடே கிடையாது என்பதை அவை விளக்குகிறது.
ராஜகோபுரத்தின் மேல் நிலைகள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும்.அவை மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்பனவாகயிருக்கும். மூன்று நிலைகள் - ஜாக்கிரத், ஸ்வப்பன, சுஷுப்தி என்பவற்றைக் குறிக்கும். ஐந்து நிலைகள் - ஐம்பொறிகளைக் குறிக்கும்.ஏழு நிலைகள் - ஐம்பொறிகளோடு மனம், புத்தி என இரண்டும் சேரும். ஒன்பது நிலைகள் - அந்த ஏழினொடு சித்தம், அங்காரம் என இரண்டும் சேரும்.
பஞ்சேந்திரியங்களைக் கொண்டும் மனம், புத்தி முதலியவைகளைக் கொண்டும் புறவுலகை அறிகிறோம். புறவுலகை அறிகிற செயலை அப்படியே நிறுத்திவிட்டு, மனைத்துணையாகக் கொண்டு பரம்பொருளிடத்துப் பயணம் போக வேண்டும் என்கிற கோட்பாட்டையே ராஜகோபுர வாசல் பிரவேசம் நமக்கு உணர்த்துகிறது.