கருட பஞ்சமி கேள்விப் பட்டூள்ளீர்களா? அதன் மகிமை உங்களுக்கு தெரியுமா?

ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாகசதுர்த்தி கொண்டாடுகிறார்கள்.


அன்று நாகர் சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு. நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதர வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம்! நாகதோஷம் உள்ளவர்களும் ராகு, கேது தோஷங்களால் பாதிப்பு உள்ளவர்களும் ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து நாகதேவதையை வழிபட்டு அனுசரிப்பதே நாகபஞ்சமி விரதம். ஆடி பஞ்சமி முதல் ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்று இந்த விரதத்தை மேற்கொண்டு 12ம் மாதமான ஆனிமாத வளர்பிறை பஞ்சமி அன்று இவ்விரதத்தை முடிப்பர். இதன் பலனால், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறும் குழந்தைப்பேறு உடையவர்கள் குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தியும் உண்டாகும்.

கருட புராணத்தின் படி கத்ரு எனப்படும் நாகங்களின் தாய்க்கும், கருட பகவானின் தாயான வினிதைக்கும் ஏற்பட்ட சவாலில் வினிதை தோற்றதால் கத்ருவுக்கு அடிமையாக சேவகம் செய்யும் நிலை ஏற்பட்டது. பாம்புகளின் தாயான கத்ரு, கருடனின் தாயான வினிதையை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதால் கருடனுக்கு பாம்புகளின் மீது மிகுந்த கோபமும், வெறுப்பும் உண்டானது. தனது தாயின் அடிமைத்தளையை போக்க நினைத்த தனையனான கருடபகவான் கத்ருவிடம் சென்று தனது தாயை விடுவிக்குமாறு கூற, அதற்கு கத்ரு தேவலோகத்தில் இந்திரன் வைத்திருக்கும் இறவாவரம் தரும் அமிர்தம் நிறைந்த கலசத்தை கொண்டு வந்து தன்னிடம் கொடுத்தால், கருடனின் தாயை தான் விடுவிப்பதாக கூற, அதை ஏற்று கருட பகவான் தன் பலம் பொருந்திய சிறகால் பறந்து இந்திர லோகம் சென்று, இந்திரனிடமிருந்த அந்த அமிர்த கலசத்தை கவர்ந்து கொண்டு வந்து, கத்ருவிடம் கொடுக்க கத்ருவும் கருடனின் தாயான வினிதையை விடுதலை செய்தாள்.

இறவா வரமளிக்கும் தேவாமிர்தத்தை கருடபகவான் கவர்ந்து வந்தாலும், அதிலிருந்து ஒரு சொட்டை கூட தான் அருந்தாமல் தன் தாய் விடுதலை அடைவதற்காக அதை கத்ருவிடம் கொடுத்தார். கருடனின் இத்தகைய மனோதிடத்தையும், பராக்கிரமத்தையும் கண்டு வியந்த மகாவிஷ்ணு “உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கருடனிடம் கேட்க, அதற்கு கருட பகவான் மகாவிஷ்ணுவான தங்களுக்கு வாகனமாக இருக்கும் பாக்கியம் வேண்டும் என்று கூற, அவ்வாறே மகாவிஷ்ணுவும் வரம் தந்தருளினார். அன்றிலிருந்து திருமாலின் வாகனமாக கருடபகவான் வலம் வருகிறார்.

பெருமாளின் வாகனமாகவும் கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியாக அனுசரிக்கப்படுகிறது.

கருட யாகமும் தேன் அபிஷேகமும் பாவங்கள், நோய்கள் அகலவும், குடும்ப நலம், தைரியம் ஏற்படவும், எதிரிகள் தொல்லை அகலவும், நீண்ட ஆயுள், பணவரவு ஏற்படவும், ஸர்ப்ப தோஷம், ராகு கேது திசா புக்திகளால், ஏற்படும் துன்பங்கள், விபத்து, மரண பயங்கள், புத்தி பேதலிப்புகள் சர்ம வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள் விலகவும், துர் ஆவிகள் பாதிப்புக்களில் இருந்து விலகும், இரத்த புற்று நோய், எலும்பு புற்று நோய், போன்ற பலவிதமான புற்று நோய்கள், பித்ரு, பிரம்ம ஹத்தி தோஷங்கள், பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வ தோஷங்கள், கால சர்ப தோஷங்கள், பில்லி, சூன்யம், ஏவல், சத்ரு தொல்லைகள், தீராதநோய் நீங்கவும், மறுபிறவியற்ற நிலையை அடையவும், குடும்பத்தில் சுபிட்சம் உருவாகவும், பிறக்கும் குழந்தைகள் அறிவும் வீரமும் உடையவர்களாக விளங்கவும், ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் நடைபெறுகிறது.

கருடன்! மங்கள வடிவமானவன். பறவைகளின் அரசன். கருடனைத் தரிசிப்பது சுபசகுனம். ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி. இன்றளவும் கும்பாபிஷேகத்தின்போது எத்தனை விதமான பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் பூஜையின்போது கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது. கருடனைத் தரிசிக்கும்போது நம் மனம் நிறைவடைகிறது. ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவதே தனிச்சிறப்பு ஆகும்.