ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் அற்புதம் தெரியுமா? நோய்கள் குணமடையும் மந்திரம் இதோ...

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்


ஆன்மீக அறிவுக்காகவும் தேகநலனுக்காகவும் சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும். ஆவணி ஞாயிறன்று சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் புகழ் கூடும்.

சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்த கிருஷ்ணர் ஆவணி மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது.

ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமானது.

ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் விரதத்தை அனுஷ்டித்து வந்தனர்.

பொதுவாக தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரிய உதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகருக்கு #பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் மேலும் நன்மை உண்டாகும்.