இன்று அமாவாசை சதயம் நக்ஷத்திரத்தில் வந்துள்ளது. இந்த மகத்துவம் நிறைந்த மாசி அமாவாசையில் இந்த தானம் செய்தால் நல்லது!

பொதுவாக கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அமாவாசை தினத்தில் தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன், அமானுஷ்ய விஷயங்களிருந்து மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.


அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலஞ்சென்ற நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசையில், தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, முன்னோரை ஆராதித்து, அவர்களை வணங்கினால், நாமும் நம் சந்ததியினரும் வளமுடன் வாழ்வோம் என்பது உறுதி. முக்கியமாக, பித்ரு சாபம் இல்லாமல், பெருமகிழ்வுடன் வாழலாம் என்கின்றனர்.

அமாவாசை, கிரகணம், புரட்டாசி மகாளயபட்ச காலம், தமிழ் மாதப் பிறப்பு என மொத்தம் 96 வகையான தர்ப்பணங்கள் உள்ளன. இந்த 96 தர்ப்பணங்களையும் செய்ய முடியாவிட்டாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை முதலான காலங்களிலேனும் அவசியம் தர்ப்பணம் செய்து, முன்னோரை வணங்கலாம்.

மாசி அமாவாசை தினமான இன்று (23.02.2020) அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு, மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு சிராத்தம், திதி போன்றவற்றை உங்கள் ஊரில் கோயில் குளக்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களில் தர வேண்டும்.

இன்று அமாவாசையுடன் சதயம் நக்ஷத்திரம் கூடிவருகிறது. மிக மிக விசேஷமான அமைப்பு இது. இந்த நன்னாளில் மஹாளயபக்ஷத்தைப் போன்று ஸர்வபித்ருக்களுக்கும் சிரார்த்தம் செய்வது உத்தமம்.இதனால் பித்ருக்கள் ஆசீர்வாதம் கிடைப்பதல்லாமல் ஜாதகத்திலுள்ள பித்ருதோஷமும் கட்டுப்படும். இன்று ஸர்வபித்ருசிராத்தம் செய்து (கோக்ராஸம்) அதாவது பசுமாட்டிற்கு அரிசி, வெல்லம், அகத்திக்கீரை, வாழைப்பழம் முதலியவைகளை கொடுக்க வேண்டும். இதனால் நாம் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகும்...இந்த சடங்குகளை முடித்த பின்பு சடங்குகளை செய்த வேதியர்களுக்கு அரிசி, காய்கறிகள், வஸ்திர துண்டு போன்றவற்றை தானம் அளிப்பது சிறந்தது.

மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால், அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத் தரும். இந்த அமாவாசை நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் 16 ஆயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும். மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வந்தால், அந்த நன்னாளில் சிரார்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் மகத்துவங்களை தரும் மாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணி காய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இதை செய்வதால் தொடர்ந்து வரும் காலங்களில் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது.